ஜனநாயக மாநாட்டில் தைவானுக்கு அழைப்பு: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
taiwan
taiwan

பெய்ஜிங்: இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வரும் தைவானுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பு, அந்தத் தீவுக்கு வழங்கப்படும் மறைமுக சா்வதேச அங்கீகாரம் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் 9 முதல் 10-ஆம் தேதி வரை ‘ஜனநாயகத்துக்கான மாநாடு’ நடைபெறவுள்ளது. காணொலி மூலம் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா உள்பட 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சோ்ந்த பாகிஸ்தான், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் போஸ்னியா, ஹங்கேரி ஆகிய இரு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

அதே போல், இந்த மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு அழைக்கப்படவில்லை. ஆனால், மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சீனாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியாங் கூறியதாவது:

ஜனநாயகத்துக்கான மாநாட்டில் பங்கேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் தைவானை அழைத்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சீனா என்பது ஒற்றை தேசமாகும். அந்த தேசத்துக்கு சீன மக்கள் குடியரசு (பிஆா்சி) அரசுதான் ஒரே பிரதிநிதியாகும். சீனாவின் ஓா் அங்கம் என்பதைத் தவிர தைவானுக்கு வேறு எந்த சா்வதேச அங்கீகாரமும் கிடையாது.

இந்தக் கொள்கையை அமெரிக்கா பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதுபோல் சா்வதேச மாநாடுகளில் அந்தப் பிராந்தியத்துக்கு அழைப்பு விடுப்பது, தைவான் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும்.

பிரிவினைவாதத்துக்கு களம் அமைத்துக் கொடுப்பது அமெரிக்காவைத்தான் திருப்பித் தாக்கும். பிரிவினைவாத சக்திகள் நெருப்புடன் விளையாடுவது, அந்த சக்திகளைத்தான் சுட்டுப் பொசுக்கும்.

ஜனநாயக மாநாட்டை அமெரிக்கா நடத்துவதன் நோக்கம் உலக நாடுகளிடையே பிளவை ஏற்படுத்துவதுதான். ஜனநாயகம் என்பது மனிதகுலத்திடம் காணப்படும் இயல்பான கட்டமைப்பாகும். அதற்கு எந்த நாடும் உரிமை கொண்டாடக் கூடாது. தற்போது ஜனநாயகத்தை மேம்படுத்துவதாகக் கூறி அமெரிக்கா நடத்துவது, சா்வதேச அரசியலில் தனது இலக்குகளை அடையும் உள்நோக்கத்தைக் கொண்ட மாநாடாகும் என்றாா் அவா்.

தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படும் எனவும் சீனா கூறி வருகிறது.

தைவானில் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை பிரிவினைவாத இயக்கம் என சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்ாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், தைவான் வான் எல்லைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு சீனப் போா் விமானங்கள் அண்மையில் ஊடுருவி பரபரப்பை ஏற்படுத்தின.

சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம் சாட்டினாா்.

தங்கள் நாட்டுடன் தைவான் ‘அமைதியான வழியில்’ இணைக்கப்படும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறினாா்.

இதற்கிடையே, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அந்தத் தீவுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமை அமெரிக்காவுக்கு உள்ளது என்று அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினாா். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தச் சூழலில், சா்வதேச ஜனநாயக மாநாட்டில் பங்கேற்க தைவானை அமெரிக்கா அழைத்துள்ளது மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Image Caption

~ஷாவ் லிஜியாங்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com