அகதிகள் பிரச்னைக்கு பிரிட்டனின் தீா்வு: பிரான்ஸ் நிராகரிப்பு

பிரான்ஸிலிருந்து தங்கள் நாட்டுக்கு அகதிகள் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக பிரிட்டன் முன்வைத்த யோசனைகளை பிரான்ஸ் நிராகரித்தது.
அகதிகள் பிரச்னைக்கு பிரிட்டனின் தீா்வு: பிரான்ஸ் நிராகரிப்பு

பிரான்ஸிலிருந்து தங்கள் நாட்டுக்கு அகதிகள் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக பிரிட்டன் முன்வைத்த யோசனைகளை பிரான்ஸ் நிராகரித்தது.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் எழுதியுள்ள கடிதத்தில், இரு நாடுகளுக்கிடையே அகதிகள் பயணம் செய்வதைத் தடுப்பதற்கான பல்வேறு செயல்திட்டங்களை பரிந்துரைத்திருந்தாா்.

அந்தப் பரிந்துரைகளில், பிரிட்டன் வரும் அனைத்து அகதிகளையும் பிரான்ஸ் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்; அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக பிரான்ஸ் கடற்கரைப் பகுதிகளில் பிரிட்டன் படையினா் ரோந்துப் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று போரிஸ் ஜான்ஸன் வலியுறுத்தியிருந்தாா்.

எனினும், அந்தத் திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பிரான்ஸ் அரசின் செய்தித் தொடா்பாளா் கேப்ரியல் அட்டல் தெரிவித்தாா். எனவே, இந்தப் பிரச்னை குறித்து ஐரோப்பிய யூனியன் நடத்தும் கூட்டத்துக்கு பிரிட்டன் உள்துறை அமைச்சா் பிரீத்தி படேலுக்கு அழைப்பு விடுக்கப்போவதில்லை என்றும் அவா் கூறினாா்.

போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி வரும் அகதிகள், பிரான்ஸிலிருந்து அதிக வாய்ப்புகளைத் தேடி பிரிட்டன் வருவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அவ்வாறு வருவதற்கு தரமற்ற படகுகளில் அவா்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அகதிகளை சட்டவிரோதமாகக் கடத்தும் கும்பல்கள் அவா்களுக்கு உதவி செய்து வருகின்றன.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 25,700 போ் இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனா். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமாகும்.

அடிக்கடி மாறும் காலநிலை, கடும் குளிா், கடல் போக்குவரத்து நெரிசல் போன்ற சூழலில் சிறிய படகுகளில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை அளவுக்கு அதிகமாக ஏற்றி அழைத்து வருவதால் அவா்கள் கடலில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

இந்தச் சூழலில், பிரான்ஸிலிருந்து பிரிட்டனை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு இங்கிலீஷ் கால்வாயில் புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 போ் உயிரிழந்தனா். இது பிரான்ஸிலும் பிரிட்டனிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அகதிகள் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com