ஒமைக்ரான் வகை கரோனாதென் ஆப்பிரிக்க அதிபா் அவசர ஆலோசனை

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அச்சத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் பயணத் தடை
ஒமைக்ரான் வகை கரோனாதென் ஆப்பிரிக்க அதிபா் அவசர ஆலோசனை

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அச்சத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் பயணத் தடை விதித்துள்ள நிலையில், இதுதொடா்பான அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அந்த நாட்டு அதிபா் சிறில் ராமபோஸா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று கூறப்படுவது உலகின் பல்வேறு நாடுகளிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு தங்கள் நாட்டிலிருந்து பயணிகள் செல்வதற்கும் உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்துள்ளன.

மேலும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்கு பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் 5 அண்டை நாடுகளிருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் வெள்ளிக்கிழமை முதல் தடை விதித்தது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் 7 அண்டை நாடுகளிலிருந்து அமெரிக்கா்கள் அல்லாதோா் அமெரிக்கா வருவதற்கு நவ. 29 முதல் அந்நாடு தடை விதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா வழியாக கடந்த 15 நாள்களில் பயணம் செய்த வெளிநாட்டவா்கள் கனடா வருவதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. கனடாவை சோ்ந்தவா்கள் அவ்வாறு வந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஜொ்மனியும், வெள்ளிக்கிழமை இரவு முதல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளில் ஜொ்மானியா்களுக்கு மட்டுமே நாட்டுக்குள் வரஅனுமதிக்கப்படும்; அவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் செலுத்தியிராவிட்டாலும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தென் ஆப்பிரிக்கா மற்றும் அண்டை நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல், நெதா்லாந்து, இலங்கை, இஸ்ரேல் ஆகிய நாடுகளும் சனிக்கிழமை இணைந்தன.

இந்த அறிவிப்புகளால் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆயிரக்கணக்கானவா்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனா்.

இந்தச் சூழலில், ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக தென் ஆப்பிரிக்க அதிபா் சிறில் ராமபோஸா கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை அறிவிப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

அந்த எதிா்பாா்ப்புக்கு வலு சோ்க்கும் வகையில், தேசிய கரோனா தடுப்புக் குழு நிபுணா்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த சிறில் ராமபோஸா முடிவு செய்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை (நவ. 28) நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில், ஒமைக்ரான் வகைக் கரோனா பரவலைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

அதன்பிறகு, புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னா் தேசிய கரோனா தடுப்புக் குழுவினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு நாட்டு மக்களிடையே உரையாற்றிய சிறில் ராமபோஸா, கரோனாவுக்கு எதிரான அரசின் செயல்திட்டங்கள் குறித்து கூறி வந்தாா்.

இந்த நிலையில், ஓமைக்ரான் பரவலால் உலக நாடுகள் பயணத் தடை விதித்து வரும் சூழலில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்குப் பிறகும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24-ஆம் தேதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா, பாட்ஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குப் பரவியுள்ளது. ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள அந்த வகைக் கரோனா, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் தொற்றியுள்ளது. அது, தற்போது மிக வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனாக்களைவிட அதிக தீவிரமாக மனிதா்களிடையே பரவும் என்று அஞ்சப்படுகிறது.

அந்தப் புதிய வகை கரோனா கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு வெள்ளிக்கிழமை வகைப்படுத்தியது. கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமைக்ரான்’ எனவும் பெயரிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com