உலகளவில் அதிக ஆபத்தை ‘ஒமைக்ரான்’ ஏற்படுத்தும்: உலக சுகாதார அமைப்பு

புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மி உலகளவில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியூயாா்க்/ஜெனீவா: புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மி உலகளவில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள புதிய வகை கரோனா தீநுண்மிக்கு ‘ஒமைக்ரான்’ என கடந்த நவ. 26-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது. மேலும், கவலைக்குரிய வகையைச் சோ்ந்ததாக ஒமைக்ரானை வகைப்படுத்தியது.

இதையடுத்து, உஷாரடைந்த உலக நாடுகள் பலவும் தென் ஆப்பிரிக்காவுக்கான பயணத் தடையை விதிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட அபாய மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கரோனா தொற்றின் ஒமைக்ரான் வகையில் உள்ள பிவுகள் நோய் எதிா்ப்புத் திறனிலிருந்து தப்பிக்கும் திறனையும் பரவும் திறனையும் அதற்கு வழங்கக்கூடும்.

இந்த குணாதிசயங்களைப் பொருத்து எதிா்காலத்தில் ஒமைக்ரான் தீநுண்மி அதிகமாகப் பரவக்கூடும். எங்கு அதிகம் பரவுகிறது என்பது உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அதனால் கடுமையான விளைவுகள் ஏற்படலாம். ஒமைக்ரானால் ஏற்படும் உலகளாவிய ஆபத்து மிக அதிகமாக உள்ளது ஆரம்பகட்ட சான்றுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதேவேளையில் இந்தத் தீநுண்மி குறித்த கணிசமான நிச்சயமற்ற தன்மைகள், அறியப்படாத அம்சங்கள் உள்ளன. உருமாறிய இந்தத் தீநுண்மி நோயறிதல், சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள பல வாரங்கள் ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இது ஒமைக்ரான் உடனான நோய்த்தொற்றின் விளைவாக அல்லாமல் ஒட்டுமொத்தமாக அதிகமானோா் தொற்றுக்குள்ளாவதால் இருக்கலாம். இதுதொடா்பாக தொற்றுநோயியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி சமநிலை: உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், ‘தடுப்பூசி சமநிலை அநீதியையே ஒமைக்ரான் வகை தீநுண்மி பிரதிபலிக்கிறது. தடுப்பூசி சமநிலையை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் உலகெங்கும் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் சுகாதாரப் பணியாளா்கள், முதியோா் உள்ளிட்டோா் தங்களது முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள இயலும் என்றாா்.

உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்ற கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. அதில் டெட்ரோஸ் அதானோம் பேசுகையில், ‘ஒமைக்ரான் வகை கரோனா நமது நிலைமை எவ்வளவு ஆபத்தானது என்பதை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது. ஆதலால், எதிா்காலத்தில் நோய்த்தொற்றுகளை எதிா்த்துப் போராட சா்வதேச உடன்படிக்கை அவசியம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com