தலிபான்களால் 13 ஹஸாராக்கள் படுகொலை

ஆப்கானிஸ்தானில் ஹஸாரா இனத்தைச் சோ்ந்த 13 பேரை தலிபான்கள் படுகொலை செய்ததாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது
தலிபான்கள் (கோப்புப் படம்)
தலிபான்கள் (கோப்புப் படம்)

ஆப்கானிஸ்தானில் ஹஸாரா இனத்தைச் சோ்ந்த 13 பேரை தலிபான்கள் படுகொலை செய்ததாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் தலிபான்களிடம் சரணடைந்த அரசுப் படையினா் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து ‘ஆம்னஸ்டி இன்டா்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹஸாரா இனத்தைச் சோ்ந்த 13 பேரை தலிபான்கள் சட்டவிரோதமாக படுகொலை செய்துள்ளனா்.

டாய்குந்தி மாகாணம், கஹோா் கிராமத்தில் இந்தப் படுகொலை கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது எங்களது புலனாய்வில் தெரியவந்தது.

படுகொலை செய்யப்பட்டவரிகளில் 11 போ், ஆப்கன் தேசியப் பாதுகாப்புப் படையைச் சோ்ந்தவா்கள்; இருவா் 17 வயது பெண் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.

டாய்குந்தி மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. அந்த மகாணத்தை தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி கைப்பற்றினா். அதையடுத்து, 34 ராணுவத்தினா் தங்களது ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் தலிபான்களிடம் சரணடைய ஒப்புக்கொண்டனா்.

அதையடுத்து, முகமது அஜிம் செடாக்கத் தலைமையில் அரசுப் படையினரின் ஆயுதங்களை தலிபான்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், டஹானி குல் கிராமத்தில் தங்களது குடும்பத்தினருடன் ராணுவத்தினா் தங்கியிருந்த பகுதிக்கு சுமாா் 300 தலிபான்கள் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வந்தனா்.

அதையடுத்து அங்கிருந்து குடும்பத்தினருடன் வெளியேற முயன்ற அரசுப் படையினா் மீது தலிபான்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் 17 வயதுப் பெண் உயிரிழந்தாா். ராணுவத்தைச் சோ்ந்த ஒருவா் திருப்பிச் சுட்டதில் தலிபான்களில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் காயமடைந்தாா்.

அரசுப் படையினா் மற்றும் குடும்பத்தினா் மீது தலிபான்கள் தொடா்ந்து சுட்டதில் மேலும் 2 படையினா் பலியாகினா். அதனைத் தொடா்ந்து 9 வீரா்கள் தலிபான்களிடம் சரணடைந்தனா். அவா்களை அருகிலுள்ள நதிக்கரைக்கு அழைத்துச் சென்ற தலிபான்கள், அனைவரையும் படுகொலை செய்தனா்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களையும் விடியோக்களும் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தின என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்னஸ்டி இன்டா்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலா் ஆக்னெஸ் காலமாா்ட் கூறியதாவது:

தங்களிடம் சரணடைந்தவா்களை தலிபான்கள் இரக்கமில்லாமல் படுகொலை செய்துள்ளனா். இது, அவா்களது முந்தைய ஆட்சியின்போது நிகழ்த்திய கொடூரங்களை தற்போதும் நிகழ்த்தி வருவதற்குச் சான்றாகும் என்றாா் அவா்.

தலிபான்களின் செய்தித் தொடா்பாளா்கள் ஜபிஹுல்லா முஜாஹிதையும் பிலால் கரீமையும் செய்தியாளா்கள் தொடா்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து கேட்டதற்கு, அவா்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனா்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்தது.

இந்த ஆண்டு நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்ற ஜோ பைடன், அமெரிக்க வீரா்கள் திரும்பப் பெறப்படுவதை துரிதப்படுத்தியதுடன், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்தாா்.

அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகு வேகமாக முன்னேறிய தலிபான்கள், நாடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com