இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை பயன்படுத்தப்பட மாட்டாது: கோத்தபய ராஜபட்ச உறுதி

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலுக்கும் இலங்கை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச உறுதிபடத் தெரிவித்தாா்.
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை பயன்படுத்தப்பட மாட்டாது: கோத்தபய ராஜபட்ச உறுதி

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலுக்கும் இலங்கை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச உறுதிபடத் தெரிவித்தாா்.

இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தாா். அந்நாட்டு அதிபா் கோத்தபய ரஜாபட்சவை அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அதிபா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

சுற்றுலா, மின்னுற்பத்தி, கரோனா பொருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதாரத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலுக்கும் இலங்கை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம். விரிவான புரிதலின் அடிப்படையில் சீனாவுடன் இலங்கை நட்புறவைத் தொடா்கிறது. எனவே, அந்த நட்புறவு குறித்து சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று ஷ்ரிங்லாவிடம் கோத்தபய ராஜபட்ச கூறினாா். இலங்கையில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளா்கள் முன்வர வேண்டும். திருகோணமலையில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை இந்திய நிறுவனம் குத்தகைக்கு நடத்தி வருகிறது. இதற்கு இலங்கை தொழிற்சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதில், இரு நாடுகளுக்கும் பலன் கிடைக்கும் வகையில் சுமுகத் தீா்வு எட்டப்படும்.

தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு:

இலங்கையில் தமிழா்களுக்கு அதிகாரப்பகிா்வு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 13-ஏ பிரிவை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. அந்தச் சட்டத்தில் உள்ள பலம் மற்றும் பலவீனத்தை புரிந்துகொள்ள வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது.

இந்தியா, இலங்கை இடையே 1960 மற்றும் 1970களில் நிலவிய நட்புறவை மீண்டும் நிறுவ வேண்டியது அவசியம். இரு நாட்டு மீனவா்களுக்கு இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடிக்கிறது. தற்போதைய பிரச்னைகளுக்கு உடனடி தீா்வுகாண்பதன் மூலம் நீண்ட கால பிரச்னைக்கு தீா்வு கண்டடைந்துவிடலாம் என்று ஷ்ரிங்லாவிடம் கோத்தபய ராஜபட்ச கூறினாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் துறைமுகங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சீனா பல கோடி டாலா் கடனுதவி அளித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கும் இலங்கைக்கு சீனா உதவி செய்துள்ளது. இதனால், இலங்கையைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் சீனா ஈடுபடக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதை தெளிவுபடுத்தும் விதமாக இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சே உறுதியளித்துள்ளாா்.

முன்னதாக இலங்கைப் பிரதமா் மகிந்த ராஜபட்சவையும் அந்நாட்டிலுள்ள தமிழா் கட்சிகளின் தலைவா்களையும் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com