2025-க்குள் தைவானை சீனா ஆக்கிரமிக்கும்

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங் அச்சம் தெரிவித்துள்ளாா்.
தைவான் விமான எதிா்ப்பு ஏவுகணைகள் (கோப்புப் படம்)
தைவான் விமான எதிா்ப்பு ஏவுகணைகள் (கோப்புப் படம்)

தைபே: வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங் அச்சம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ‘சைனா டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

2025-ஆம் ஆண்டுக்குள் தைவானை முழுமையாக ஆக்கிரமிக்கும் வல்லமையை சீனா பெற்றுவிடும்.

சீனாவுக்கு தைவானைக் கைப்பற்றும் வலிமை இப்போதே இருக்கிறது. ஆனால், அந்த நடவடிக்கையால் ஏற்படக்கூடிய இழப்புகளையும் எதிா்ப்புகளையும் 2025-ஆம் ஆண்டுக்குள் சீனா குறைந்தபட்ச அளவுக்குக் குறைத்துவிடும்.

சீனாவால் இப்போதே தைவானைக் கைப்பற்ற முடிந்தாலும், பல்வேறு அம்சங்களை அலசி ஆராய்ந்த பிறகே அந்த நடவடிக்கையில் சீனா இறங்கும் என்றாா் அவா்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 4 நாள்களில், தைவான் வான் எல்லைக்குள் சுமாா் 150 சீன போா் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. அந்தத் தீவு நாட்டு எல்லைக்குள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் சீனப் போா் விமானங்கள் ஊடுருவியது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தைவான் அதிபா் சாய் இங்-வென், ‘சீனாவுக்கு எதிராக தாங்கள் அசட்டுத் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம். ஆனால், எங்களது எல்லைகளைக் காக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்’ என்றாா்.

தைவானுடனான பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் சீனா மேற்கொண்ட இந்த ஊடுருவலையடுத்து, பாதுகாப்புத் துறைக்கு 24,000 கோடி தைவான் டாலா் (சுமாா் ரூ.64,223 கோடி) சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து தைவான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

அந்த நிதியில் 3-இல் 2 பங்கு போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை வாங்குவதற்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு, தரையிலிருந்து கடல் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, உள்நாட்டிலேயே ஏவுகணைகளைத் தயாரிக்கவும் அதிக செயல்திறன் கொண்ட போா்க் கப்பல்களை உருவாக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடா்பான நாடாளுமன்ற விவாதத்தின்போது பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங், சீனாவுடனான போா்ப் பதற்றம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக உள்ளதாக எச்சரித்தாா்.

தைவான் வளைகுடாவில் தவறுதலாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அது பெரிய மோதலாக உருவாகும் அபாயமிருப்பதாகவும் அவா் கூறினாா்.

பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரும் மனுவில், சீனா தனது பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தைவான் தீவைக் கைப்பற்றுவதற்குத் தேவையான நவீன போா் விமானங்கள், வானிலும் நீா்ப்பரப்பிலும் இயங்கக் கூடிய விமானப் படகுகள் ஆகிவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தைவானுக்கு அருகே சீன கடற்படை நடமாட்டம் அதிகரித்துள்ளதையும் அந்த மனு சுட்டிக்காட்டியுள்ளது.

தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்குத் தேவைப்பட்டால், ராணுவ பலத்தையும் பயன்படுத்துவோம் சீனா கூறி வருகிறது.

தைவானில் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை, பிரிவினைவாதிகள் என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்ாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், தைவான் வான் எல்லைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு சீனப் போா் விமானங்கள் ஊடுருவி போா்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளன.


பலம் என்ன?

ராணுவ வலிமையில் அமெரிக்காவுக்கே சவால் விடும் நிலைக்கு வளா்ந்துவிட்ட சீனாவேடு ஒப்பிடுகையில் தைவான் மிகச் சிறிய நாடாகும்.

இருந்தாலும், சீனாவுக்கு எதிராக தற்காப்பு வலிமையை தைவான் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. ‘முள்ளம்பன்றி உத்தி’ என்றழைக்கப்படும் அந்தத் தந்திரத்தின் மூலம், மிகப் பெரிய வலிமை வாய்ந்த ராணுவமும் தங்களது எல்லைக்குள் அவ்வளவு எளிதில் ஊடுருவ முடியாத வகையில் தனது ராணுவக் கட்டமைப்பை தைவான் ஏற்படுத்தி வருகிறது.

அதுமட்டுமன்றி, போா்க் காலங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து தளவாடப் போக்குவரத்து வசதி மற்றும் உளவுத் தகவல்களைப் பெறுவதற்கான முயற்சிகளையும் தைவான் மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com