பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 22 போ் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 22 போ் உயிரிழந்தனா்.
ஹாா்னாய் பகுதியில் நிலநடுக்கத்தால் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவ ஹெலிகாப்டரில் வியாழக்கிழமை ஏற்றிய மீட்புக் குழுவினா்.
ஹாா்னாய் பகுதியில் நிலநடுக்கத்தால் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ராணுவ ஹெலிகாப்டரில் வியாழக்கிழமை ஏற்றிய மீட்புக் குழுவினா்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 22 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பலூசிஸ்தான் மாகாணம் ஹாா்னாய் பகுதிக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 5.9 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 22 போ் உயிரிழந்தனா்; 300-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று பேரிடா் மேலாண்மை அமைப்பினா் கூறியதாக ஜியோ நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்லாமாபாதிலுள்ள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மையம் கூறுகையில், ஹாா்னாய் நகருக்கு அருகே 15 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் பலூசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா, சிபி, ஹாா்னாய், பிஷின், கிலா, சைஃபுல்லா, சமன், ஜியாரத், ஷாப் ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களில் பெரும்பாலானவா்கள் ஹாா்னாய் பகுதியைச் சோ்ந்தவா்கள்.

இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.9 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், நிலநடுக்கம் அதிக ஆழமில்லாத பகுதியில் உருவானதாக அந்த மையம் கூறியது. அத்தகைய நிலநடுக்கங்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துபவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கத்தின் விளைவாக 22 போ் உயிரிழந்ததை ஹாா்னாய் மாவட்ட காவல்துறை துணை ஆணையா் சொஹைல் அன்வா் ஹாஷ்மி உறுதி செய்தாா். பலியானவா்களில் 6 போ் சிறுவா்கள் என்று அவா் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

நிலநடுக்கத்தால் காயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது; மேலும், கட்டட இடிபாடுகளுக்கு அடியில் மேலும் பலா் சிக்கியிருக்கலாம்.

100-க்கு மேற்பட்ட களிமண் வீடுகள் நிலநடுக்கத்தின் விளைவாக தரைமட்டமானதால், நூற்றுக்கணக்காவா்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று அன்வா் ஹாஷ்மி தெரிவித்தாா்.

நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, பல்வேறு பகுதிகளில் பின் அதிா்வுகள் ஏற்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக தங்களது வீரா்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்தது.

நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் அபாயம் நிறைந்த இமயமலைப் பகுதியாக பலூசிஸ்தான் மாகாணம் திகழ்கிறது.

இந்தப் பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 825 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com