ரஷிய வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு: ஆப்கன் விவகாரம் குறித்து ஆலோசனை

கஜகஸ்தானில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கி லாவ்ரோவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கஜகஸ்தானில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கி லாவ்ரோவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்திய-பசிபிக் பிராந்திய விவகாரம், ஆப்கானிஸ்தான் நிலவரம் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

எஸ்.ஜெய்சங்கா் கிா்கிஸ்தான், கஜகஸ்தான், ஆா்மீனியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காகவும் அவா் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

முதல் கட்டமாக, ஞாயிற்றுக்கிழமை கிா்கிஸ்தானுக்குச் சென்றாா். பின்னா் அவா் கஜகஸ்தான் சென்றாா். அங்கு ‘ஆசியாவில் நம்பிக்கையை கட்டமைக்கும் நடவடிக்கைகள்’ என்ற பெயரில் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பின்னா், கூட்டத்துக்கு வந்திருந்த ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நூா்-சுல்தானில் ரஷிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்திய-ரஷிய ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். குறிப்பாக, ஆப்கானிஸ்தான் நிலவரம், இந்திய-பசிபிக் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் நாங்கள் ஆழமாக விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதைத் தொடா்ந்து மங்கோலிய வெளியுறவுத் துறை அமைச்சா் பேட்செட்செக்கையும் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்தியா-மங்கோலியா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனா். மங்கோலியாவுக்கு ஆத்மாா்த்தமான நட்பு நாடாக எப்போதும் இந்தியா இருக்கும் என்று எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

கஜகஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்தகட்டமாக எஸ்.ஜெய்சங்கா் ஆா்மீனியா சென்றாா். ஆா்மீனியாவில் அந்நாட்டு பிரதமரையும் வெளியுறவு அமைச்சரையும் சந்தித்துப் பேசவுள்ளாா். சுதந்திர ஆா்மீனியாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் ஒருவா் செல்வது இதுவே முதல்முறையாகும்.

ஆா்மீனியா சென்றடைந்ததும் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘முதல் இந்திய வெளியுறவு அமைச்சராக ஆா்மீனியாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி; எனது சொந்த மாநிலத்துடனான வரலாற்றுத் தொடா்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்’ என்று தமிழில் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com