லக்கிம்பூர் போன்று நாட்டின் மற்ற பகுதிகளில் நிகழும்போது கேள்விகள் எழுப்பப்படுவதில்லை: நிர்மலா சீதாராமன்

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

லக்கிம்பூர் கெரி வன்முறையில் நான்கு விவசாயிகள் கொலை செய்யப்பட்டிருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹார்வர்டு கென்னடி பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, லக்கிம்பூர் கெரியில் நான்கு விவசாயிகள் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த விவகாரத்தில், பிரதமர், மூத்த அமைச்சர்கள் என யாருமே கருத்து தெரிவிக்கவில்லையே, இதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட்டாலும் நேரடியான பதில்கள் கிடைப்பது இல்லையே என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய அவர், "இல்லை, முற்றிலும் இல்லை. இந்த சம்பவம் குறித்து நீங்கள் கேள்வி எழுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்க சம்பவம். நாம் அனைவரும் அதைதான் சொல்கிறோம். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் மற்ற இடங்களிலும் நிகழ்கிறது என்பதுதான் என் கவலை.

இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற இயல்பான பிரச்னைகள் நிகழ்கிறது. நீங்களும் அமர்த்தியா சென் உள்பட பலரும் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நமக்கு தேவை என்று இருக்கும்போது மட்டும் ஒரு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. அங்கு, பாஜக ஆட்சியில் இருப்பதாலேயே இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. என்னுடைய அமைச்சரவை சகாவின் மகன் ஒருவர் இதில் சிக்கியுள்ளார். அவர்தான் இக்குற்றத்தை செய்துள்ளார் வேறு யாரும் இதை செய்யவில்லை என்றே கருதப்படுகிறது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பிறகு நீதி நிலைநாட்டப்படும்.

எனது கட்சியோ பிரதமரோ தற்காத்து கொள்கின்றனர் என்றல்ல. இது இந்தியாவை தற்காப்பது போன்று. நான் இந்தியாவுக்காகப் பேசுவேன், ஏழைகளுக்கான நீதிக்காகப் பேசுவேன். நான் கேலி செய்ய மாட்டேன். அதுவே மற்றவர்கள் கேலி செய்யும் பட்சத்தில், உண்மையை அடிப்படையாக வைத்து பேசுவோம் என்றே அவர்களிடம் கூறுவேன்." என்றார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து பதிலளித்து பேசிய அவர், "அரசு கொண்டுவந்த மூன்று சட்டங்கள் பல்வேறு நாடாளுமன்ற குழுக்களால் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. மாநில அரசுகளால் இது விவாதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, பாஜக ஆட்சி அமைத்த பின்பும், வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

பல ஆண்டுகளாக, இச்சட்டங்கள் குறி்த்த முன் வடிவங்கள் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. பல தரப்பிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளோம். மக்களவையில் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது, ஒரு விரிவான விவாதம் நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சரும் தனது விளக்கத்தை அளித்தார். மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றபோதுதான் அதிக குழப்பம் ஏற்பட்டது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com