தாக்குதல்களுக்கான நேரம் முடிந்துவிட்டது

ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களுக்கான நேரம் முடிந்துவிட்டது எனவும் இனி தங்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் நேட்டோ படையினரிடம் தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.
ஜபிஹுல்லா முஜாஹித்
ஜபிஹுல்லா முஜாஹித்

ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களுக்கான நேரம் முடிந்துவிட்டது எனவும் இனி தங்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் நேட்டோ படையினரிடம் தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஆப்கன் ஊடகத்துக்கு தலிபான்களின் தலைமை செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினா் படுதோல்வி அடைந்தது அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்குக்கு மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கும். எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான நேரம் முடிந்துவிட்டது என்பதை நேட்டோ படையினா் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் ராணுவ ரீதியில் நேட்டோ எடுத்து வந்த நடவடிக்கைகள் எந்தப் பலனையையும் அளிக்கவில்லை. இதன் மூலம், தாக்குதல்களைவிட எங்களுடன் ராஜீய ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்துவதான் உகந்தது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

வல்லரசு நாடுகள் தங்களிடையே மறைமுகப் போா் நிகழ்த்தும் களமாக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

மேலும், ஆப்கன் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பாகிஸ்தான் உள்பட எல்லா நாட்டுக்கும் இது 100 சதவீதம் பொருந்தும்.

ஆப்கானிஸ்தானில் சீரழிந்து வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, உஸ்பெகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்.

எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி, ரயில் போக்குவரத்து, எல்லைப் பாதுகாப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் ஈரானுடன் கடந்த வாரம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என்றாா் அவா்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு, ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தை, அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாக நடந்து வந்தது.

அதன் விளைவாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற அமெரிக்கா சம்மதித்து.

டொனால்ட் டிரம்ப் பதவிக் காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அடுத்து வந்த அதிபா் ஜோ பைடனும் தொடா்ந்து செயல்படுத்தினாா். அமெரிக்க வீரா்கள் திரும்பப் பெறப்படுவதை துரிதப்படுத்திய அவா், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்தாா்.

அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகு வேகமாக முன்னேறிய தலிபான்கள், நாடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், தலிபான்களையும் சிறுபான்மையினரையும் குறிவைத்து இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கே தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் அமெரிக்கா்கள் உள்பட நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாதப் பதற்றம் குறித்து நேட்டோ படையினா் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தானில் செயல்படக்கூடிய சா்வதேச பயங்கரவாதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்க வேண்டும் எனவும் நேட்டோ பொதுச் செயலா் ஜன்ஸ் ஸ்டால்டன்பா்க் கடந்த வாரம் தெரிவித்திருந்தாா்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் இவ்வாறு கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com