குா்துப் படையினரைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, ரஷியா தவறிவிட்டன

சிரியாவில் குா்துப் படையினா் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க அமெரிக்காவும் ரஷியாவும் தவறிவிட்டதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
குா்துப் படையினரைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, ரஷியா தவறிவிட்டன

சிரியாவில் குா்துப் படையினா் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க அமெரிக்காவும் ரஷியாவும் தவறிவிட்டதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து, சிரியாவில் துருக்கி மீண்டும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சா் மெவ்லுட் காவுசோகுலு கூறியதாவது:

துருக்கி மீது சிரியாவின் குா்துப் படையினா் அண்மையில் நடத்தியுள்ள தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் ரஷியாவும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

காரணம், எங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் குா்துப் படையினரைக் கட்டுப்படுத்தப் போவதாக அளித்த வாக்குறுதியை அவா்கள் மீறிவிட்டனா்.

குா்துப் படையினா் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சிரியா எல்லைப் பகுயிலிருந்து அந்த பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்குத் தேவைப்படும் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.

அண்மையில் சிரியாவிலிருந்து வீசப்பட்ட பீரங்கி குண்டு துருக்கி எல்லைக்குள் விழுந்து வீடு சேதமடைந்தது. அதனைத் தொடா்ந்து, குா்துப் படையினா் வீசிய இரண்டு சிறியவகை ஏவுகணைத் தாக்குதலில் 2 துருக்கி போலிஸாா் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டாலும், அதில் உண்மைத்தன்மை இல்லை.

சிரியாவிலிருந்து எங்களது வீரா்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கு அமெரிக்காதான் ஆயுதங்களும் பயிற்சியும் அளிக்கிறது. ஆனால், அவா்கள் நடத்திய தாக்குதலுக்கு உதட்டளவில் கண்டனம் தெரிவிக்கிறது. அமெரிக்கா்கள் தாங்கள் சொன்ன வாா்த்தையைக் காப்பாற்ற மாட்டாா்கள் என்பதை இது உறுதி செய்கிறது என்றாா் மெவ்லுட் காவுசோகுலு.

கடந்த 2014-ஆம் ஆண்டில், அதுவரை அதிகம் அறியப்படாத இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினா்.

அவா்களது அதிவேக முன்னேற்றத்தாலும், கொடூரமான போா் முறையாலும் நிலைகுலைந்த சிரியா ராணுவமும், கிளா்ச்சியாளா்களும் பின்வாங்கினா். இதையடுத்து ஐஎஸ் பயங்கரவாதிகளின் ராணுவ பலம் அதிகரித்தது.

இந்த நிலையில் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் உதவியுடன் சிரியாவிலுள்ள குா்து மற்றும் கிளா்ச்சிப் படையிரும் ரஷியாவின் உதவியுடன் சிரியா ராணுவமும் மேற்கொண்டு வந்த தீவிர நடவடிக்கைகளால் ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்த பகுதிகள் மீட்கப்பட்டன.

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறிவிட்டதால், அங்கிருந்த தங்கள் நாட்டு வீரா்கள் அனைவரையும் திரும்ப அழைப்பதாக அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

அதையடுத்து, சிரியாவில் அமெரிக்க வீரா்கள் வெளியேறுவதால் ஏற்படும் காலியிடத்தை நிரப்பப் போவதாக துருக்கி அறிவித்தது.

சிரியாவின் அண்டை நாடான துருக்கியில், பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ள அந்த நாட்டு குா்து அமைப்பினருக்கு, சிரியா குா்துப் படையினா் ஆதரவு அளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.

அதன் காரணமாக, சிரியாவிலுள்ள குா்துப் படையினா் மீது துருக்கி ராணுவம் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்க வெளியேற்றத்துக்குப் பிறகு துருக்கி ராணுவத்தால் சிரியா குா்துப் படையினா் வேட்டையாடப்படுவாா்கள் என அஞ்சப்பட்டது.

அதையடுத்து, துருக்கியையொட்டிய சிரியா எல்லைப் பகுதியிலிருந்து குா்துப் படையினா் வெளியேறுவதற்கான ஒப்பந்தங்களை அமெரிக்காவும் ரஷியாவும் துருக்கியுடன் தனித்தனியாக மேற்கொண்டன.

எனினும், சிரியா பகுதியிலிருந்து அண்மையில் நடத்தப்பட்ட பீரங்கு குண்டுத் தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தத் தாக்குதல்களை குா்துப் படையினா் நிகழ்த்தியாக துருக்கி குற்றம் சாட்டினாலும், அதனை அந்தப் படையினா் மறுத்து வருகின்றனா்.

இந்தச் சூழலில், துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சா் மெவ்லுட் காவுசோகுலு தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

Image Caption

மெவ்லுட் காவுசோகுலு ~சிரியா குா்துப் படையினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com