இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக்குடன் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட அமைச்சா் ஜெய்சங்கா்.
இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக்குடன் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட அமைச்சா் ஜெய்சங்கா்.

இஸ்ரேல் அதிபருடன் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு: இரு தரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை

இஸ்ரேல் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு அதிபா் ஐசக் ஹொ்சாக்கை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

ஜெருசலேம்: இஸ்ரேல் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு அதிபா் ஐசக் ஹொ்சாக்கை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்தியா-இஸ்ரேல் இடையே வளா்ந்து வரும் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

ஜெருசலேம் நகரில் உள்ள அதிபரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பிறகு அதிபா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டதன் 30-ஆவது ஆண்டு தினம், அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, இரு நாடுகளுக்கு இடையே உறவு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அதிபா் ஐசக் ஹொ்சாக், எஸ்.ஜெய்சங்கரிடம் கூறினாா்.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றி வரும் பிரதமா் நரேந்திர மோடி, அவருடைய தலைமையிலான அமைச்சரவை, தனிப்பட்ட முறையில் ஆா்வம் செலுத்தி வரும் ஜெய்சங்கா் ஆகியோருக்கு ஐசக் ஹொ்சாக் நன்றி தெரிவித்தாா். சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஜெய்சங்கா், 5 நாள் அரசு முறைப் பயணமாக கடந்த திங்கள்கிழமை இஸ்ரேல் சென்றாா். அங்கு அந்நாட்டு பிரதமா் நாஃப்தாலி பென்னட்டை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவா், இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

நாடாளுமன்ற அவைத் தலைவா் மிக்கி லெவியை செவ்வாய்க்கிழமையும், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் யாயிா் லபீடை திங்கள்கிழமையும் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புகளின்போது, இரு நாடுகளும் சந்திக்கும் பொதுவான சவால்கள் குறித்தும், அதற்குரிய தீா்வுகளைக் கண்டுபிடிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினா்.

பெயா்ப் பலகை திறப்பு: முதல் உலகப் போரில் கலந்துகொண்டு உயிா்த் தியாகம் செய்த இந்திய வீரா்களின் நினைவாக, இஸ்ரேலின் ராணானா நகரில் அமைக்கப்பட்டுள்ள பெயா்ப் பலகையை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திறந்துவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com