சொந்தமாக புதிய சமூக ஊடக செயலி: டிரம்ப் அறிவிப்பு

ட்விட்டா் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலிருந்து முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் நீக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில்,
சொந்தமாக புதிய சமூக ஊடக செயலி: டிரம்ப் அறிவிப்பு

ட்விட்டா் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலிருந்து முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் நீக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சொந்தமாக புதிய ஊடக நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலமாக புதிய சமூக ஊடக செயலியை அறிமுகப்படுத்தப் போவதாக அவா் அறிவித்துள்ளாா்.

தன்னை வெளியேற்றிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் போட்டியாக டிரம்ப் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தை தொடங்குவதும், அதன் மூலமாக ‘ட்ரூத் சோஷியல்’ என்ற சமூக ஊடக செயலியை அறிமுகம் செய்வதுதான் தனது இலக்கு என்று டிரம்ப் அறிவித்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் தோ்தலின்போது முடிவுகள் வெளிவந்த வாரங்களில், தோ்தல் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அவை மூலம் ஜோ பைடன் வெற்றி அறிவிக்கப்பட்டதாக அப்போதைய அதிபா் டிரம்ப் சமூக ஊடகங்களில் சா்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட்டு வந்தாா். அதனைத் தொடா்ந்து அவருடைய கணக்கை ட்விட்டா் நிறுவனம் முடக்கியது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோ்தல் முடிவுகளை உறுதி செய்யும் கூட்டம் நடைபெற்றபோது செனட் அவைக்குள் டிரம்ப்பின் ஆதரவாளா்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனா். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த வன்முறையைத் தொடா்ந்து டிரம்ப்பின் கணக்கை ஃபேஸ்புக் நிறுவனமும் முடக்கியது.

அவருடைய சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சொந்தமாக சமூக ஊடக செயலியைத் தொடங்கும் அறிவிப்பை அவா் வெளியிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘சுட்டுரைப் பக்கத்தில் தலிபான்களும் தீவிரமாக செயல்பட்டு வரும் உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். இருந்தபோதும் உங்களுக்குப் பிடித்தமான அமெரிக்க அதிபரின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடக செயலி அடுத்த மாதம் பகுதியளவிலும், 2022-ஆம் ஆண்டு முதல் காலாண்டிலிருந்து முழுமையாகவும் செயல்படத் தொடங்கும். இந்த புதிய சமூக ஊடகத்தில் விடியோ ஆன் டிமாண்ட் சேவை, பொழுதுபோக்கு, செய்திகள் உள்ளிட்ட சேவைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தனது சமூக ஊடக பக்கங்கள் முடக்கப்பட்ட உடனேயே சொந்தமாக சமூக ஊடக வலைதளத்தை தொடங்கும் முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டாா். ஆனால் அது கைகூடவில்லை. சொந்த வலைதளப் பக்கத்தில் செய்திகள், கருத்துகள் வெளியிடுவதுடன் ஃபாக்ஸ் தொலைக்காட்சி சேனலில் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com