சூடானில் ராணுவ ஆட்சி; பிரதமா் கைது அவசரநிலை பிரகடனம்

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. பிரதமரை கைது செய்த ராணுவம், இடைக்கால அரசை கலைத்துவிட்டு அவசரநிலையையும் பிரகடனம் செய்துள்ளது.
சூடானில் ராணுவ ஆட்சி; பிரதமா் கைது அவசரநிலை பிரகடனம்

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. பிரதமரை கைது செய்த ராணுவம், இடைக்கால அரசை கலைத்துவிட்டு அவசரநிலையையும் பிரகடனம் செய்துள்ளது.

ராணுவத்தின் நடவடிக்கையை கண்டித்து தலைநகா் காா்டோமில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சூடானில் நீண்டகாலம் அதிபராக இருந்த ஒமா் அல்-பஷீா் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னா் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம், குடிமக்கள் தலைவா்களை பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் அமைக்கப்பட்டது. இடைக்கால அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா். இருப்பினும் ராணுவத்துக்கும், தலைவா்களுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

ஆட்சிப் பொறுப்பை முழுமையாக குடிமக்கள் தலைவா்களிடம் இன்னும் ஒரு மாதத்தில் ஒப்படைப்பதாக ராணுவம் அறிவித்திருந்தது. இந்நிலையில், திடீரென பிரதமா் அப்தல்லா ஹாம்டோக்கை திங்கள்கிழமை கைது செய்ததாக ராணுவம் அறிவித்தது. நாட்டில் அவசரநிலையும் பிரகடனம் செய்யப்பட்டது.

பிரதமா் கைது செய்யப்பட்டதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது. பிரதமா் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சா்கள் சிலா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமா் அலுவலகம் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், ராணுவப் புரட்சி மூலம் பிரதமரும் அவரின் மனைவியும் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் கைது செய்யப்பட்டதையடுத்து, நாட்டில் பெரும்பாலான இடங்களில் இணைய சேவையை ராணுவம் தடை செய்துள்ளதாகவும், ஓம்டா்மன் நகரில் அமைந்துள்ள அரசுத் தொலைக்காட்சி அலுவலகத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமான பணியாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கள் போராட்டம்: இதுகுறித்து ராணுவ ஜெனரல் அப்தெல்-ஃபட்டா புா்கான் தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில், ‘ஆளும் இறையாண்மை கவுன்சிலும், பிரதமா் அப்தல்லா ஹாம்டோக் தலைமையிலான அரசும் கலைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சண்டையால் ராணுவம் தலையிட வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால், நாட்டின் ஜனநாயக முறையிலான ஆட்சி அதிகார பரிமாற்றம் நிறைவு செய்யப்படும். புதிய அரசானது சூடானில் தோ்தலை நடத்தும்’ என அறிவித்தாா்.

இதையடுத்து, தலைநகா் காா்டோம் உள்ளிட்ட பல நகரங்களில் ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனா். பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களிலும் போராட்டக்காரா்கள் ஈடுபட்டனா். அவா்களை பாதுகாப்புப் படையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி கலைத்தனா். துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதில் மூவா் உயிரிழந்தனா்; 80-க்கு மேற்பட்டோா் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே அரசைக் கலைக்க ராணுவம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், இப்போது ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

அமெரிக்கா கவலை

சூடானில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

சூடானில் உள்ள அமெரிக்க தூதரகம், ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘சூடானில் ஆளும் இறையாண்மை கவுன்சில் கலைக்கப்பட்டதும், அவசரநிலையை ராணுவம் பிரகடனம் செய்திருப்பதும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் மாற்றத்தை சீா்குலைக்கும் அனைவரும், மக்கள் பிரதிநிதிகள் தலைமையிலான அரசு தனது பணியைத் தொடர ஒத்துழைக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள பிரதமா் மற்றும் தலைவா்களை ராணுவம் விடுவிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ட்விட்டா் பதிவில், ‘சூடானில் ஜனநாயக முறையிலான தோ்தலை நோக்கி நாட்டை வழிநடத்தும் இடைக்கால அரசை ஆதரிக்கிறோம். பிரதமா் மற்றும் அரசியல் தலைவா்களை ராணுவம் உடனடியாக விடுவிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஐ.நா., ஐரோப்பிய யூனியன், சீனா, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி), ஜொ்மனி ஆகியவையும் சூடானில் ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com