கரோனாவை கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்? பதிலளிக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி

சமூகத்தின் ஒட்டுமொத்த ஈடுபாடு இருந்தால் மட்டுமே வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புனே சர்வதேச மையம் சார்பில் பேரிடர் தயார்நிலை குறித்து நடத்தப்படும் மாநாடு மகாராஷ்டிராவின் புனே நகரில் இன்று தொடங்குகிறது.

 காணொலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், "ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நகரில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் கரோனா பாதிப்பைத் தடுக்க முடியாது. 

அனைத்து பகுதிகளிலும் அங்குள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
 தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த ​நிதி, உட்கட்டமைப்பு வசதிகள், கருவிகள் ஆகியவையும் தேவை. 

அதேபோல, சமூகத்தின் ஒட்டுமொத்த ஈடுபாடு இருந்தால் மட்டுமே வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும். மேலும், நமக்குப் பிராந்திய அளவில் மட்டுமின்றி அனைத்து ஊர்களிலும் முறையான ஆய்வக வலைப்பின்னல் தேவை. அனைத்து மட்டங்களிலும் பணியாளர்களின் பயிற்சி மற்றும் திறனை வளர்ப்பது மிக மிக அவசியம். 

குறிப்பாக, ஆரம்பச் சுகாதாரத்தில் நமக்கு அதிக அளவில் முதலீடு தேவைப்படுகிறது. கரோனாவால் நாம் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளோம். ஆனால், இப்போது கூட நாம் சர்வதேச அளவில் நோயறிதலுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுக்கவில்லை என்றால் வரும் காலத்தில் மீண்டும் ஒரு பேரிடரை நாம் எதிர்கொள்ள நேரும்" என்று அவர் தெரிவித்தார்.

மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து வகையான பேரிடர்களையும் எதிர்கொள்ள ஒரு நாடு எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com