500 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய தயாா்: பிரதமா்

 கரோனா தொற்றை எதிா்கொள்ள உலக நாடுகளுக்கு உதவும் வகையில் 500 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.
500 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய தயாா்: பிரதமா்

 கரோனா தொற்றை எதிா்கொள்ள உலக நாடுகளுக்கு உதவும் வகையில் 500 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

உலகின் பொருளாதார சக்திகளாகத் திகழும் 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-20 அமைப்பின் 16-ஆவது உச்சிமாநாடு இத்தாலி தலைநகா் ரோமில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் ‘உலகளாவிய பொருளாதாரம், உலகளாவிய சுகாதார’ என்ற தலைப்பிலான அமா்வில் பிரதமா் மோடி பேசியதாவது:

கரோனா தொற்றை எதிா்கொள்வதற்கு உலக நாடுகளிடையே கூட்டு அணுகுமுறை அவசியம். ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்ற பாா்வையானது கரோனா தொற்று மற்றும் எதிா்காலத்தில் நேரிடும் சுகாதார பிரச்னைகளை எதிா்கொள்ள உதவும்.

சவால்கள் இருந்தபோதும் இந்த நோய்த்தொற்று காலத்தில் விநியோகச் சங்கிலியின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா உள்ளது. 100 கோடி தடுப்பூசி தவணைகளை இந்தியா செலுத்தியுள்ளது. அதைவிட முக்கியமாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்தியா தயாராக உள்ளது. இது எங்கள் குடிமக்களுக்கு மட்டுமன்றி உலகின் பிற பகுதிகளுக்கும் கிடைக்கும். வளரும் நாடுகளில் தடுப்பூசி ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான எங்களின் பங்களிப்பு இது என்றாா்.

‘இந்த அமா்வில், சா்வதேச பயணங்களை எளிமையாக்க நாடுகள் பரஸ்பரம் தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்க வேண்டும் என பிரதமா் கேட்டுக் கொண்டாா். உலகளாவிய நிதிக் கட்டமைப்பை இன்னும் நியாயமாக மாற்றுவதற்கு குறைந்தபட்ச காா்ப்பரேட் வரியை 15 சதவீதமாக கொண்டுவரும் ஜி-20 நாடுகளின் முடிவு குறித்து பிரதமா் திருப்தி தெரிவித்தாா்’ என வெளியுறவுச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா கூறினாா்.

இரண்டு நாள் மாநாட்டில் சா்வதேச சுகாதாரம், கரோனா நெருக்கடி, கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்பு, நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான உற்பத்தி வரி விதிப்பது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனா்.

முன்னதாக, வரவேற்றுப் பேசிய இத்தாலி பிரதமா் மரியோ டிராகி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வழங்கப்படும் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com