இதை அங்கீகரிக்கவில்லை எனில் உலக பிரச்னையாக மாறிவிடும்: அமெரிக்காவுக்கு செய்தி அனுப்பிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள அரசை அங்கீகரிக்கவில்லை எனில் அது எங்கள் நாட்டுக்கு மட்டும் இன்றி உலகத்திற்கே பிரச்னையாக மாறிவிடும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
தலிபான்கள் (கோப்புப் படம்)
தலிபான்கள் (கோப்புப் படம்)

ஆப்கானிஸ்தானில் உள்ள அரசை அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி, அங்கீகரிக்க தவறினால், வெளிநாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டின் நிதி முடக்கப்பட்டு அது உலக பிரச்னையாக மாறிவிடும் என்றும் தலிபான்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து எந்த நாடும் தலிபான் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு சொந்தமான பில்லியான் டாலர்கள் மதிப்பிலான பணம் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமையன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித், "அமெரிக்காவிற்கு நாங்கள் சொல்லவரும் செய்தி என்னவென்றால், எங்கள் அரசை அங்கீகரிக்காமல் இருப்பது தொடர்ந்தால், ஆப்கானிஸ்தான் பிரச்னை தொடரும். அது பிராந்தியத்தின் பிரச்னை. பின்னர், உலக பிரச்னையாக கூட மாறும்.

தலிபான்களும் அமெரிக்காவும் கடந்த முறை போருக்குச் சென்றதற்குக் காரணம் இருவருக்கும் முறையான தூதரக உறவுகள் இல்லாமல் இருந்ததுதான். போருக்கு காரணமான பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம். அரசியல் சமரசத்தின் மூலமும் தீர்த்திருக்கலாம். 

அரசுக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆப்கன் மக்களின் உரிமை. போக்குவரத்து உள்கட்டமைப்பிற்கு சீனா நிதியளிக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக சீன சந்தைகளுக்கு காபூலின் ஏற்றுமதிகளை எடுத்து செல்லவும் உறுதியளித்துள்ளது" என்றார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தானிக்கு அமெரிக்கா படையெடுத்தது. அப்போதைய தலிபான் அரசு அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க மறுத்ததைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தப்பட்டது.

எந்த நாடும் தலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை என்றாலும், பல நாடுகளின் மூத்த அலுவலர்கள் காபூலிலும் வெளிநாட்டிலும் தலிபான் அமைப்பின் தலைமையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். 

சனிக்கிழமையன்று கூட துர்க்மேன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரசித் மெரிடோவ் காபூலுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, துர்க்மெனிஸ்தான் - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் - இந்தியா (TAPI) எரிவாயு குழாய்த்திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது குறித்து இரு தரப்பும் விவாதித்தாக முஜாஹித் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த வார தொடக்கத்தில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ கத்தாரில் தலிபான் அலுவலர்களை சந்தித்து பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com