ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்திய செளதி அரேபியா

செளதி அரேபியா தமாமில் தாக்குதலை முறியடிக்கும்போது ஏவுகணை வெடித்து சிதறியதில் இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

செளதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் அதிகம் இருக்கும் கிழக்கு பகுதியை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அந்நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமாம் நகரில் இந்த ஏவுகணை தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமாமில் புறநகர் பகுதியில் தாக்குதலை முறியடிக்கும்போது ஏவுகணை வெடித்து சிதறியதில் இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள 14 வீடுகளுக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக செளதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.

இருப்பினும், இத்தாக்குதல் முயற்சிக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை. நாட்டின் தெற்கே அமைந்துள்ள ஜசன் மற்றும் நஜ்ரான் ஆகிய பகுதிகளை நோக்கி வந்த ஏவுகணைகளையும் தாக்கி அழித்துள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது. முன்னதாக, இதேபோன்று ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் கிணறுகள் உள்ள கிழக்கு செளதியில் முன்னதாக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, அராம்கோ ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக நாட்டின் 50 சதவிகித எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. செளதி அரேபியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com