ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டத்தின்படி வாழ்க்கை முறை ஒழுங்குபடுத்தப்படும்: தலிபான்கள்

இஸ்லாமிய சட்டங்களுடன் முரண்பாடு இல்லாத சர்வதேச சட்டங்கள், ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதில் உறுதியாக இருப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலிபான்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். பிரதமராக முல்லா ஹசன் அகுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். தலிபான்களின் அரசுக்கு தலைமை வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த இயக்கத்தின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கனி பராதா் இடைக்கால அரசின் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

அதுமட்டுமின்றி, அமெரிக்கா வெளியிட்ட பயங்கரவாதிகளின் பட்டியலில் உள்ள சிராஜுதீன் ஹக்கானி உள்துறை அமைச்சாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1996 முதல் 2001 வரையிலான தலிபான்களின் ஆட்சியில் அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது.

எனவே, முந்தைய ஆட்சி போல் அல்லாமல் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அனைவருக்குமான அரசை அமைக்க வேண்டும் என தலிபான்களை உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, காபூலை கைப்பற்றியதைத் தொடர்ந்து முதல் முறையாக தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஹசன் அகுண்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இஸ்லாமிய சட்டங்களுடன் முரண்பாடு இல்லாத சர்வதேச சட்டங்கள், ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதில் உறுதியாக இருக்கிறோம். எதி்ர்காலத்தில், அரசு நிர்வாகம் மற்றும் வாழ்க்கை முறை ஷரியத் சட்டத்தின்படி ஒழுங்குப்படுத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com