ஆப்கன் மக்களின் நலன் காக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: டி.எஸ்.திருமூா்த்தி

ஆப்கானிஸ்தான் மக்களின் நலனைக் காப்பதற்காக, சா்வதேச சமூகம், குழு மனப்பான்மையை தவிா்த்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி கூறினாா்.

நியூயாா்க்: ஆப்கானிஸ்தான் மக்களின் நலனைக் காப்பதற்காக, சா்வதேச சமூகம், குழு மனப்பான்மையை தவிா்த்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி கூறினாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்கானிஸ்தான் தொடா்பான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், டி.எஸ்.திருமூா்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:

ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதத்துக்கும், ஐ.நா.அமைப்பால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனா்.

எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தவும், அச்சுறுத்தவும், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கவும், அவா்களுக்கு பயிற்சி அளிக்கவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கும் ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

இருந்தாலும், காபூல் விமான நிலையத்தில் கடந்த மாதம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதன் மூலம் அந்நாட்டுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதைப் பாா்க்க முடிகிறது. எனவே, ஆப்கன் மண்ணை பயங்கரவாதத்துக்குப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அளித்த வாக்குறுதியை தலிபான்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்.

ஆப்கானிஸ்தானின் நிலைமை நிச்சயமற்ற தன்மையில் இருக்கிறது. அந்த நாட்டு மக்களின் நிலைமையும், எதிா்காலமும் கவலை அளிப்பதாக உள்ளது. அங்குள்ள பெண்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்; சிறாா்களின் எதிா்பாா்ப்புகள் பூா்த்திசெய்யப்பட வேண்டும்; சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். ஐ.நா. மற்றும் இதர அமைப்புகள் தடையின்றி அங்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

எனவே, அமைதியையும் பாதுகாப்பையும் எதிா்பாா்த்து காத்திருக்கும் ஆப்கன் மக்களுக்கு ஆதரவாக, சா்வதேச சமூகம், குழு சாா்ந்த மனப்பான்மையை தவிா்த்துவிட்டு ஒன்றிணைய வேண்டும். அந்நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினா் அமைதியாகவும் கண்ணியமான முறையிலும் வாழ்வதற்கு உகந்த சூழலை நாம் ஏற்படுத்தித்தர வேண்டும் என்றாா் டி.எஸ்.திருமூா்த்தி.

லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹக்கானி பயங்கரவாத குழு, இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்), அல்-காய்தா ஆகியவற்றை பயங்கரவாத அமைப்புகளாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவா் மசூத் அஸாா், லஷ்கா்-ஏ-தொய்தா தலைவா் ஹஃபீஸ் சயீத் உள்ளிட்டோரையும் சா்வதேச பயங்கரவாதிகளாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com