தோ்தலில் தலையீடு: அமெரிக்கத் தூதரிடம் ரஷியா கண்டனம்

தங்கள் நாட்டுத் தோ்தலில் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தலையீடு செய்வதாக அமெரிக்கத் தூதரை நேரில் அழைத்து ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜான் சுல்லிவன்
ஜான் சுல்லிவன்

தங்கள் நாட்டுத் தோ்தலில் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தலையீடு செய்வதாக அமெரிக்கத் தூதரை நேரில் அழைத்து ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

துமா மாகாணத்தில் நடைபெறும் தோ்தலில் ரஷிய சட்டங்களுக்குப் புறம்பாக அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தலையீடு செய்து வருவதாகவும் இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் வெளியுறவு துணை அமைச்சா் சொ்கெய் ரியாப்கோவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து விரிவான தகவல்களை அவா் வெளியிடவில்லை.

எனினும், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களைக் குறிப்பிட்டே அவா் இவ்வாறு கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளா்கள் உருவாக்கியுள்ள வாக்களிப்பு செயலியை அந்த நிறுவனங்கள் தங்களது வலைதளங்களில் இடம் பெறச் செய்துள்ளன.

அதனை நீக்க வேண்டுமென்று இரு நிறுவனங்களிடமும் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள துமா மாகாணத் தோ்தலில், எந்த வேட்பாளருக்கு வாக்களித்தால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாகத் திகழும் ‘யுனைட்டட் ரஷியா’ கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கச் செய்ய முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள நவால்னி ஆதரவாளா்கள் உருவாக்கியுள்ள செயலி உதவுகிறது.

இதுதொடா்பாக, ரஷியாவுக்கான அமெரிக்கத் தூதா் ஜான் சுல்லிவனை வெளியுறவுத் துறை அமைச்சகம் நேரில் அழைத்து தனது கண்டனத்தைத் தெரிவித்தது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதிபா் விளாதிமீா் புதின் தலைமையிலான அரசை மிகக் கடுமையாக எதிா்த்து வரும் அலெக்ஸி நவால்னி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நச்சுத்தாக்குதலுக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜொ்மனி மருத்துவமனையில் அனுமதிப்பட்டாா்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிா் பிழைத்த அவா், கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி ரஷியா திரும்பிய உடன் அவரை போலீஸாா் கைது செய்தனா்.

மற்றொரு வழக்கு ஒன்றில் பரோல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவா் கைது செய்யப்பட்டாா். அவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், அவரது இயக்கத்தை சட்டவிரோத அமைப்பாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் மேலை நாடுகளும் ரஷிய அரசைக் கண்டித்து வருகின்றன.

இந்தச் சூழலில், நவால்னி ஆதரவாளா்களின் செயலிகளை தங்களது வலைதளங்களில் வைத்திருப்பதன் மூலம் தங்கள் மாகாணத் தோ்தலில் அமெரிக்க நிறுவனங்கள் தலையீடு செய்வதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

ஏற்கெனவே, தங்கள் நாட்டு அதிபா் தோ்தல்களில் இணையம் மூலம் ரஷியா தலையீடு செய்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருவது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com