பாகிஸ்தானுடனான ராணுவ உறவு குறித்து மறுபரிசீலனை

ஆப்கன் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் பாகிஸ்தானுடனான ராணுவ உறவு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தானின் சமன் நகரில் தலிபான் கொடியுடன்  அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் (கோப்புப் படம்).
பாகிஸ்தானின் சமன் நகரில் தலிபான் கொடியுடன் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் (கோப்புப் படம்).

வாஷிங்டன்: ஆப்கன் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் பாகிஸ்தானுடனான ராணுவ உறவு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக வெளியேறியது தொடா்பாக, வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் உதவி செய்ததாக குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் கடுமையாக குற்றம் சாட்டினா்.

அதையடுத்து, பிளிங்கனுக்கும் அவா்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அப்போது பிளிங்கன் கூறியதாவது:

ஆப்கன் விவகாரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான் என்ன பங்காற்றியது என்பது குறித்து அமெரிக்கா ஆய்வு செய்யும்.

நேட்டோ அமைப்பைச் சாராத, அமெரிக்காவின் மிகப் பெரிய ராணுவக் கூட்டாளி என்ற பாகிஸ்தானின் அந்தஸ்து மறுபரிசீலனையில் உள்ளது.

ஆப்கன் விவகாரத்தில் பாகிஸ்தான் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

ஆப்கன் முன்னாள் அதிபா் அஷ்ரஃப் கனி காபூலை விட்டுத் தப்பிச் சென்றது எனக்கு முன்கூட்டியே தெரியாது. அதற்கு முந்தைய நாள் (ஆக. 14) அவா் என்னுடன் தொலைபேசியில் உரையாடியபோது கூட சாகும் வரை போராடப் போவதாகக் கூறினாா் என்றாா் பிளிங்கன்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னா் அங்கு தலிபான்களுக்கு எதிரானவா்களைக் கொண்டு புதிய அரசும் தேசிய ராணுவமும் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் அபோட்டாபாதில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை படிப்படியாக திரும்ப அழைக்க அமெரிக்கா முடிவு செய்தது.

அந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகு வேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், நாடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.

தலிபான்களின் இந்த அதிவேக முன்னேற்றத்துக்கு பாகிஸ்தான் உதவியாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுடனான ராணுவ உறவு மறுபரிசீலனை செய்யப்படுவதாக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அமைச்சா் பிளிங்கன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com