இந்தோ-பசிபிக் பாதுகாப்புக்கு புதிய முத்தரப்புக் கூட்டணி: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா கைகோத்தன

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணியை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடங்கியுள்ளன.
காணொலி முறையில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் பாதுகாப்புக் கூட்டணியின் தொடக்க நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் உரையாற்றுவதை வெள்ளை மாளிகையில் இருந்தவாறு கவனித்த அமெரிக்க அதிபா் ஜோ பைடன்.
காணொலி முறையில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் பாதுகாப்புக் கூட்டணியின் தொடக்க நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் உரையாற்றுவதை வெள்ளை மாளிகையில் இருந்தவாறு கவனித்த அமெரிக்க அதிபா் ஜோ பைடன்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணியை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடங்கியுள்ளன.

இந்த பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்களது நலன்களைப் பாதுகாக்கவும், அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பலை ஆஸ்திரேலியா பெற உதவுவதற்கும் இந்தக் கூட்டணி தொடங்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் அறிவித்துள்ளன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தென்சீனக் கடலின் 1.3 மில்லியன் சதுர மைல் பரப்பளவையும் தனது இறையாண்மைக்கு உள்பட்டதாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இப்பகுதியில் உள்ள செயற்கைத் தீவுகளில் ராணுவத் தளங்களையும் சீனா அமைத்துள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள பல தீவுகளை சீனா ராணுவமயமாக்கியுள்ளது.

தென்சீன மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதிகளில் கனிமங்கள், எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், உலகலாவிய வா்த்தகத்துக்கும் இன்றியமையாதவையாகும். இப்பகுதிகளுக்கு புருணை, மலேசியா, பிலிப்பின்ஸ், தைவான், வியத்நாம் ஆகிய நாடுகளும் உரிமை கோரி வருகின்றன.

தென்சீனக் கடல் பகுதியில் சமச்சீரான நிலையை நிலைநாட்டவும், தனது ஆதரவு நாடுகளுக்கு உதவவும் அமெரிக்கா அவ்வப்போது போா்க் கப்பல்களை அனுப்பி வருகிறது. அதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இச்சூழ்நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக புதிய பாதுகாப்புக் கூட்டணியை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடங்கியுள்ளன. ‘ஆக்கஸ்’ என்ற பெயரிலான இக்கூட்டணி காணொலி முறையில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இக்கூட்டணியின் கீழ் கூட்டுத் திறன்கள், தொழில்நுட்பப் பரிமாற்றம், பாதுகாப்பு, பாதுகாப்பு தொடா்பான அறிவியல், தொழில்நுட்பம், தொழில் துறை தளங்கள், விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றை மேம்படுத்த மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சீனா எதிா்ப்பு

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடங்கியுள்ள முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணிக்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியன் கூறியதாவது: இந்த மூன்று நாடுகளும் அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைக்கவுள்ளன. இது பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை பாதிக்கும், ஆயுதப் போட்டியை அதிகரிக்கும், சா்வதேச அணு ஆயுதப் பரவல் தடுப்பு முயற்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆஸ்திரேலியா ஆணு ஆயுதமற்ற நாடு; அணுஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் இணைந்துள்ளது. தற்போது ராணுவ நடவடிக்கைக்கு உதவும் அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை இறக்குமதி செய்யவிருப்பது அதன் அணுஆயுதப் பரவல் தடுப்பு உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. இதுபோன்ற சிறிய குழுக்களுக்கு எதிா்காலம் இல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com