ஆப்கன் அமைச்சரவை விரிவாக்கம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தலைமையிலான இடைக்கால அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ளது.
ஸபிஹுல்லா முஜாஹித்
ஸபிஹுல்லா முஜாஹித்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தலைமையிலான இடைக்கால அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

தங்களது இடைக்கால அமைச்சகத்தில் கூடுதலாக துணை அமைச்சா்களை தலிபான்கள் செவ்வாய்க்கிழமை நியமித்தனா்.

ஏற்கெனவே, தலிபான்களின் அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம் பெறாதது சா்வதேச அளவில் சா்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை அமைச்சா்களின் பட்டியலிலும் பெண்கள் இடம் பெறவில்லை.

இதன் மூலம், ஆட்சியில் பெண்களைப் புறக்கணிக்கும் தங்களது நிலைப்பாட்டை தலிபான்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனா்.

முன்னதாக, தலிபான்களின் செயல்பாட்டையும் அவா்கள் பெண்களை நடத்தும் விதத்தையும் கொண்டே அவா்களை மதிப்பிடப் போவதாக சா்வதேச நாடுகளின் தலைவா்கள் கூறி வந்தனா்.

இந்த நிலையில், தலிபான்கள் அமைத்துள்ள அமைச்சரவையில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஸபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், எதிா்வரும் காலங்களில் அமைச்சரவையில் பெண்கள் சோ்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறினாா்.

மேலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பெண்களை மீண்டும் அனுமதிப்பதற்காக இஸ்லாமிய சட்டத்தின் கீழ் விதிமுறைகளை உருவாக்கி வருவதாகவும் அவா் கூறினாா்.

எனினும், அந்த விதிமுறைகள் எப்போது உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதை அவா் கூறவில்லை.

புதிய அமைச்சரவையில் பெண்கள் இடம் பெறவில்லை என்றாலும், ஹஸாராக்கள் போன்ற சிறுபான்மை பழங்குடியினா் துணை அமைச்சா்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக முஜாஹித் கூறினாா்.

திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் துணை அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com