பிரிட்டன் நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் மோடி விமர்சிக்கப்பட்டாரா? உண்மை என்ன?

காஷ்மீர் விவகாரம் இருநாட்டு பிரச்சனை; அதில் பிரிட்டன் அரசின் நிலைபாடு மாறவில்லை என ஆசியாவுக்கான காமன்வெல்த் வெளியுறவுத்துறை அமைச்சர்  அமண்டா மில்லிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

'காஷ்மீரில் மனித உரிமைகள்' என்ற தலைப்பில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. காஷ்மீர் விவகாரம் தொடர்பான தீர்மானத்தை பிரிட்டன் நாடாளுமன்ற மக்களவையில் அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைத்து பேசினர். 

இதை கடுமையாக விமரிசித்துள்ள இந்தியா, "இந்திய நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி குறித்து எங்கு எந்த தளத்தில் விவாதம் நடைபெற்றாலும், நம்பகத்தன்மை வாய்ந்த உண்மை தகவல்கள் அடிப்படையிலேயே அது நடத்தப்பட வேண்டும்" என தெரிவித்தது.

தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய ஆசியாவுக்கான காமன்வெல்த் வெளியுறவுத்துறை அமைச்சர் அமண்டா மில்லிங், "காஷ்மீர் விவகாரம் இருநாட்டு பிரச்சனை; இந்த விவகாரத்தை பொறுத்தவரை பிரிட்டன் அரசின் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீரில் நிலவும் சூழலை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. 

ஆனால், காஷ்மீர் மக்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் இதில் இறுதியான அரசியல் முடிவை எடுக்க வேண்டும். இதில், பிரிட்டனால் எந்த தீர்வும் வழங்க முடியாது.

மத்தியஸ்தராக செயல்பட முடியாது" என்றார். விவாதத்தின்போது, காஷ்மீர், மோடி, 2002 குஜராத் கலவரம் குறித்து பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தொழிலாளர் கட்சி எம்பி நாஸ் ஷா சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு பிரிட்டன் அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், குஜராத் கலவரம் குறித்து எம்பி பேசியதற்கு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் குறித்து அவதூறாக பேசுவதற்கு பிரிட்டன் நாடாளுமன்ற தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

காஷ்மீர் குறித்து விவாதம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்தது. ஆனால், கரோனா காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவாதத்தில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 20 எம்பிக்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com