முக்கியத்துவம் வாய்ந்த மோடி, பைடன் சந்திப்பு

ஜோ பைடனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் நடத்தும் குவாட் உச்ச மாநாட்டில் பின்னர், கலந்து கொள்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் இன்று மாலை அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார். கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதை தொடர்ந்து முதல்முறையாக மோடி அவரை நேரில் சந்திக்கிறார். இதையடுத்து, குவாட் கூட்டமைப்பின் உச்ச மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

இதில், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக குவாட் கூட்டு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்த உச்ச மாநாடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை முதல்முறையாக மோடி சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்க, இந்திய நாடுகளின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் நடந்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தினார். 

இந்திய - அமெரிக்க உறவு, இரு நாடுகளின் நலன் சார்ந்த பரஸ்பர பிரச்னைகள், ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், ஆப்கானிஸ்தான், இந்தோ பசிபிக் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து கமலா ஹாரிஸ் மோடியிடம் ஆலோசனை மேற்கொண்டார். 

குவாட் உச்ச மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை மோடி சந்தித்து பேசினார். கடந்த வாரம், இந்திய, ஆஸ்திரேலிய நாடுகளின் விரிவான வியூக கூட்டணி குறித்து இருவரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். சமீபத்தில்தான், இந்திய, ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையே முக்கியத்துவம் வாய்ந்த 2+2 பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதேபோல், கடந்தாண்டு செப்டம்பர் மாதம், ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றதையடுத்து முதல்முறையாக வியாழக்கிழமை பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து பேசினார். அமெரிக்க பயணத்தின் ஓர் அங்கமாக, குவால்காம், அடோப், ஃபர்ஸ்ட் சோலார், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை பிரதமர் மோடி சந்தித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com