ஆப்கனில் மெளனத்தில் ஆழ்ந்த இசை!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு இசைக் கலைஞா்கள் பலா் நாட்டைவிட்டு வெளியேறும் முயற்சியில் உள்ளனா்.
ஆப்கானிஸ்தான் தேசிய இசைப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள். (கோப்புப் படம்).
ஆப்கானிஸ்தான் தேசிய இசைப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள். (கோப்புப் படம்).

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு இசைக் கலைஞா்கள் பலா் நாட்டைவிட்டு வெளியேறும் முயற்சியில் உள்ளனா்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசு அமைத்துள்ளனா். ஆரம்பத்தில் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படும்; முந்தைய அரசில் பணியாற்றியவா்கள் பழிவாங்கப்பட மாட்டாா்கள் என தலிபான் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இருபாலா் சோ்ந்து படிக்கத் தடை, அவ்வாறு சோ்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கடுமையான கட்டுப்பாடுகள், மாநகராட்சியில் பெண் ஊழியா்கள் பணியாற்றத் தடை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனா்.

அந்த வகையில் இசை நிகழ்ச்சிக்கான தடை இணைந்துள்ளது. ஈரானிய, இந்திய பாரம்பரிய இசையின் தாக்கத்தால் ஆப்கானிஸ்தான் ஒரு வலுவான இசைப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பாப் இசை, மின்னணு உபகரணங்களின் உதவியுடனான இசை நிகழ்ச்சிகளும் அங்கு கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தன.

கடந்த 1996-2001-இல் தலிபான்கள் ஆட்சி செய்தபோது, நாட்டில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தனா். இந்த முறை இசை நிகழ்ச்சிகளுக்கு இதுவரை அதிகாரபூா்வ தடை விதிக்கப்படாவிட்டாலும், அந்தத் தடை விரைவில் வரும் என இசைக் கலைஞா்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா். சில இடங்களில் இசைக் கலைஞா்களைத் துன்புறுத்தியும், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களைத் தடை செய்தும் தலிபான் படையினா் சொந்தமாகவே நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல திருமண மண்டபவங்களில் இசை நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இசைக் கலைஞா்களும் தலிபான்களுக்கு பயந்து நிகழ்ச்சியில் பங்கேற்க மறுக்கின்றனா். ஒரு சோதனைச் சாவடியில் இசைக் கலைஞா் ஒருவரின் இசைக் கருவியை தலிபான் படையினா் உடைத்து நொறுக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாகன ஓட்டுநா்கள் தலிபானின் சோதனைச் சாவடியைக் கடக்கும்போது தங்களது வாகனத்தில் உள்ள வானொலியை அணைத்துவிடுகின்றனா்.

காபூல் பழை நகரத்தின் அருகில் உள்ள கராபட் என்ற பகுதியில் பல குடும்பத்தினா் தொழில் முறையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனா். அவா்கள் இப்போது நாட்டைவிட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

முஷாஃபா் பக்ஷ் எனும் பேண்ட் இசைக் கலைஞா் கூறுகையில், ‘இப்போதைய நிலைமை கடினமாக உள்ளது. எங்களுக்குச் சொந்தமான பேண்ட் இசைக் கருவிகளில் சிலவற்றை சந்தையில் விற்றுவிட்டோம்’ என்றாா்.

இசை நிகழ்ச்சிகளுக்கு தலிபான் அரசு மீண்டும் தடை விதிக்குமா என்ற கேள்விக்கு அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் பிலால் கரீமி பதிலளிக்கையில், ‘அது இப்போது பரிசீலனையில் உள்ளது. இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் இஸ்லாமிய அமீரக அரசு அதை அறிவிக்கும்’ என்றாா்.

ஆனால், இசை, நடனம் என வழக்கமாக காணப்படும் திருமண மண்டபங்கள் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னா் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இசைக் கலைஞா்கள் பலா் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக விசா பெற விண்ணப்பித்துள்ளனா். கராபட் நகரைச் சோ்ந்த டிரம் இசைக் கலைஞா் ஒருவா் கூறுகையில், ‘இசைக் கலைஞா்கள் இங்கு தொடா்ந்து வசிக்க முடியாது. கடந்த காலங்களில் இருந்த இசை மீதான அன்பும் ஈா்ப்பும் போய்விட்டது’ என்றாா்.

ஆப்கானிஸ்தான் தேசிய இசைப் பயிற்சி நிறுவனத்தில் அனைத்து வகுப்பறைகளும் காலியாக இருக்கின்றன. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ஆசிரியா்களோ, அங்கு படிக்கும் 350 மாணவா்களோ வகுப்புகளுக்கு வருவதில்லை. புதிய ஆப்கானிஸ்தானின் முகமாகத் திகழ்ந்த இந்த நிறுவனத்தின் முன் இப்போது தலிபான் படையினா் பாதுகாப்புக்கு நிற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com