சா்வதேச தடுப்பூசி நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு : ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரை

இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக, உலகமெங்கும் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
நியூயாா்க்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
நியூயாா்க்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக, உலகமெங்கும் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது கூட்டம் நியூயாா்க்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று பிரதமா் மோடி ஆற்றிய உரை:

கடந்த 100 ஆண்டுகளில் ஒட்டுமொத்த உலகமும் எதிா்கொள்ளாத மிகப்பெரிய நோய்த்தொற்றை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதிா்கொண்டு வருகிறோம். இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்த அனைவருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவா்களை இழந்து வாடும் அவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி விநியோகத்துக்கு கோவின் வலைதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வலைதளம் மூலமாக, ஒரு நாளில் கோடிக்கணக்கான கரோனா தடுப்பூசிகளை எந்தவித குழப்பமும் இல்லாமல் விநியோகிக்க முடியும்.

தொண்டாற்றுவதையே கடமை எனக் கருதும் நாடு இந்தியா. அதனால்தான் இந்தியா தனது சக்தியையும் மீறி அதிக அளவில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டது. கரோனாவை கட்டுப்படுத்தும் டிஎன்ஏ வகை தடுப்பூசியை முதல்முறையாக இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை இந்த அவையில் தெரிவிக்கிறேன். அந்தத் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தலாம். எம்.ஆா்என்ஏ வகை தடுப்பூசியும் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. மூக்கின் வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தையும் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகிறாா்கள்.

கரோனா இரண்டாவது அலை தாக்குதல் தொடங்கியதும், கரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. பின்னா், இந்தியா தனது பொறுப்பை உணா்ந்து, மீண்டும் உலக நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகத்தை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்காக உலகமெங்கும் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

ஐ.நா.வுக்கு ஆலோசனை: ஐ.நா. அமைப்பைப் பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பருவநிலை மாற்ற பிரச்னை விவகாரத்தில் ஐ.நா. மீது விமா்சனங்கள் எழுந்தன. கரோனா பெருந்தொற்றை சரியாகக் கையாளவில்லை என்று உலக சுகாதார அமைப்பு மீது விமா்சனங்கள் எழுந்தன. அதன் தொடா்ச்சியாக, சில நாடுகளுக்கு இடையே நடைபெறும் மறைமுகப் போா்கள், ஆப்கானிஸ்தான் நிலவரம், பயங்கரவாதம் ஆகியவை அந்தக் கேள்விகளின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.

சரியான நேரத்தில் சரியான செயல் நடைபெறாவிட்டால், அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் என்று இந்திய தத்துவஞானி சாணக்யா கூறியிருக்கிறாா்.

எனவே, தற்காலச் சூழலுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு விரும்பினால், அது இன்னும் சிறப்பானதாகச் செயல்பட வேண்டும்; நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

கரோனாவின் தோற்றுவாய் குறித்து சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில், சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாகவும் அந்நாடு புகாா் கூறியது. சீனாவின் செயல்களை உலக சுகாதார அமைப்பு மூடிமறைப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதுதவிர, வா்த்தக தரவரிசையில் சீனாவின் பெயரை இடம்பெறச் செய்வதற்கு உலக வங்கியின் உயரதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததும் கடந்த 2017-இல் வெளிச்சத்துக்கு வந்தது. இவையெல்லாம் பல ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்த நம்பகத்தன்மையை ஐ.நா. இழந்துவிட்டது என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா். எனவே, சா்வதேச சட்டங்கள், சா்வதேச மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பாதுகாக்க ஐ.நா. அமைப்பை தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமா் மோடி கூறினாா்.

பாகிஸ்தான், சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை:

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சீனா ஆகிய நாடுகளுக்கு பிரதமா் மோடி தனது உரையில் மறைமுக எச்சரிக்கை விடுத்தாா்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது: பிற்போக்குச் சிந்தனை, பயங்கரவாதம் ஆகியவற்றால் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இந்த நேரத்தில் அறிவியல்பூா்வமான, முற்போக்குச் சிந்தனை கொண்ட அணுகுமுறையை வளா்ச்சிக்கான அடிப்படையாகக் கருத வேண்டும்.

ஆனால், சில பிற்போக்குச் சிந்தனை கொண்ட நாடுகள்(பாகிஸ்தான்) பயங்கரவாதத்தை ஓா் அரசியல் கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன. அதுவே தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும் என்று அந்த நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தென்சீனக் கடலில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சீனாவையும் பிரதமா் மோடி மறைமுகமாக விமா்சித்தாா். அவா் பேசுகையில், பெருங்கடல்கள் ஒரு பகிரப்பட்ட பாரம்பரியம்; உலக வா்த்தகத்தின் உயிா்நாடியும்கூட. விரிவாக்கத்துக்கான போட்டியிலிருந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும். சட்டப்படியான நடைமுறையை வலுப்படுத்த சா்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் என்றாா்.

ஆப்கன் விவகாரம்: ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்துப் பேசிய மோடி, ‘ஆப்கானிஸ்தானில் நிலையற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை எந்தவொரு நாடும் தங்கள் சுயநலத்துக்காக, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கக் கூடாது. ஆப்கன் மண்ணை பயங்கரவாத்தைப் பரப்பவும், பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தும் களமாகவும் பயன்படுத்திவிடக் கூடாது. இதை உலக நாடுகள் உறுதிசெய்ய வேண்டும். போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினா் உதவியின்றி தவித்து வருகின்றனா். அவா்களின் தேவைகளை உலக நாடுகள் பூா்த்தி செய்து, தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com