பிரதமர் மோடி மீட்டு கொண்டு வரும் இந்திய கலாசார சின்னங்கள்; முழு விவரம் இதோ

திருட்டு, சட்ட விரோதமான வர்த்தகம், கலாசார பொருள்களின் கடத்தலுக்கு எதிரான போரை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் உறுதி தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி மீட்டு கொண்டு வரும் இந்திய கலாசார சின்னங்கள்
பிரதமர் மோடி மீட்டு கொண்டு வரும் இந்திய கலாசார சின்னங்கள்

அமெரிக்காவிற்கு மூன்று நாள் அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். இதையடுத்து, அமெரிக்காவிலிருந்து விலைமதிப்பற்ற இந்திய கலைபொருள்களையும் கலாசார சின்னங்களை மீட்டு கொண்டு வரவுள்ளார். இவை அனைத்தும் 7,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

மோடியிடம் அமெரிக்க அரசு, 157 கலைபொருள்களை ஒப்படைத்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், "தொல்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்க திருப்பி அளித்ததற்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். திருட்டு, சட்ட விரோதமான வர்த்தகம், கலாசார பொருள்களின் கடத்தலுக்கு எதிரான போரை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் உறுதி தெரிவித்துள்ளனர்.

11ஆம் நூற்றாண்டிலிருந்து 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தை சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்க கலைப்பொருள்கள் உள்பட கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட செம்பால் செய்யப்பட்ட பொருள்கள், இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த மண்ணால் செய்யப்பட்ட குவளை ஆகியவை மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த ரேவந்தா மணல் சிற்பம், 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த வெண்கலத்தால் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளிட்டவையும் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அதில், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பான காலக்கட்டத்தை சேர்ந்த 45 கலைப்பொருள்கள் அடங்கும். மொத்தமுள்ள 157 கலைப்பொருள்களில் 71 கலாசார சின்னங்கள் ஆகும். 60 இந்து மதத்தையும் 16 பவுத்த மதத்தையும் 9 சமண மதத்தையும் சாரும். இந்த கலைப்பொருள்கள் யாவும் உலோகம், கல் மற்றும் மண்ணால் செய்யப்பட்டவையாகும். 

உலகம் முழுவதுமுள்ள இந்திய நாட்டை சேர்ந்த கலைப்பொருள்களை மீட்டு கொண்டு வரும் மோடி அரசு மேற்கொண்ட முயற்சியின் தொடர்ச்சியே இது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, காலணி ஆதிக்கர்கள் திருடி சென்ற இந்திய நாட்டின் கலைப்பொருள்களை மீட்டு கொண்டுவருவதில் அரசு தொடர் கவனம் செலுத்திவருகிறது.

2004 முதல் 2014 வரையில், ஒரு பழங்கால கலைப்பொருள் மட்டுமே இந்தியாவுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது. இருப்பினும், 2014 முதல் 2021 வரையில், 200க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன அல்லது திருப்பி அனுப்பப்படும் நிலையில் உள்ளன. மேலும், 1976 முதல் 2013 வரையில், இதுபோன்ற 13 பழங்கால பொருட்கள் மட்டுமே திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன. 

திருடப்பட்ட பழங்கால பொருட்களானது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜெர்மனி, கனடா, இங்கிலாந்தில் ஆகிய நாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்தாண்டு ஜூலை மாதம், ஆஸ்திரேலியாவின் தேசிய கலைக் காட்சி கூடம் 2.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள திருடப்பட்ட கலைப்படைப்புகளை இந்தியாவுக்கு திருப்பித் தருவதாக அறிவித்தது.

தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், ஆந்திரம், மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரக்கண்ட், பிகார் ஆகிய மாநிலங்களிலிருந்து இந்தப் பழங்கால பொருட்கள் திருடப்பட்டிருக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com