ராஜிநாமா செய்வது மட்டுமே இம்ரான் கானுக்கு 'கௌரவம்': எதிர்க்கட்சிகள் 

சிக்கலுக்கு உள்ளான பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ராஜிநாமா செய்வது மட்டுமே அவருக்கு "கௌரவம்" என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளது. 
இம்ரான் கான்
இம்ரான் கான்


இஸ்லாமாபாத்: சிக்கலுக்கு உள்ளான பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ராஜிநாமா செய்வது மட்டுமே அவருக்கு "கௌரவம்" என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளது. 

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் கடந்த 28-ஆம் தேதி நம்பிக்கையில்லா தீா்மானத்தை நாடாளுமன்ற கீழவையில் தாக்கல் செய்தாா். அதுகுறித்த விவாதத்துக்கு அன்றைய தினமே ஒப்புதல் அளிக்கப்பட்டு, விவாதம் மாா்ச் 31-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாடாளுமன்ற கீழவை வியாழக்கிழமை கூடியது. அவையை வழிநடத்திய துணைத் தலைவா் காசிம் சுரி அவையில் பட்டியலிடப்பட்ட அலுவல்கள் குறித்து விவாதிக்குமாறு உறுப்பினா்களைக் கேட்டுக்கொண்டாா். மொத்தம் 24 அலுவல்களில் நம்பிக்கையில்லா தீா்மானம் 4-ஆவது அலுவலாக பட்டியலிடப்பட்டிருந்தது.

ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது உடனடியாக வாக்கெடுப்பு நடத்தும்படி வலியுறுத்தினா். பின்னா், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் அவையை ஏப். 3-ஆம் தேதி காலை 11 மணி வரை அவையின் துணைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை இரவு உரையாற்றிய இம்ரான் கான், ‘எனது தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடைபெறுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கொள்கைகள் அமையவில்லை.

பாகிஸ்தானின் எதிா்க்கட்சித் தலைவா்கள் மூன்று போ் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு சோ்ந்து செயல்பட்டு வருகின்றனா். எனது  அரசு பெரும்பான்மையை இழந்தாலும் "கடைசி பந்துவரை நின்று விளையாடுவேன்". ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை எதிர்கொள்வேன், வாக்கெடுப்புக்கு பிறகு நாடு எங்கு செல்லும் என்பது முடிவு செய்யப்படும்’ என்றாா்.

இந்நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறுகையில், இம்ரான் கானுக்கு இப்போது பாதுகாப்பான பாதை இல்லை. “ராஜிநாமா செய்வது மட்டுமே இம்ரான் கானுக்கு கௌரவமானதாக இருக்கும்" என்று நான் அவருக்கு பரிந்துரைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தேசிய பாதுகாப்பு மன்றங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து சர்ச்சைக்குள்ளாக்கும் இம்ரானின் முயற்சி மூர்க்கத்தனமானது என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்  நவாஸ் கட்சி துணைத் தலைவர் மரியம் நவாஸ் ட்விட்டர் பதிவில், இம்ரான் கானுக்கு ஆதரவளித்து வந்த கூட்டணி கட்சிகள் இரண்டும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் சேர்ந்துவிட்டன. 

“நேர்மையான மனிதராக இருந்த இம்ரான் வெறித்தனமாக செயல்படுகிறார்.

நாட்டிற்கு வெளியே கேலி செய்வதற்கு முன்பாக அவர் வாயை மூட வேண்டும் அல்லது வாயை மூடிவிட வேண்டும்."  “இந்த உயர்ந்த பதவிக்கு தான் தகுதியானவன் இல்லை என்பதை தொடர்ந்து இம்ரான் நிரூபித்து வருகிறார்.

மேலும் இம்ரானுக்கு கொஞ்சமாவது கருணை இருந்தால், எல்லோருக்கும் முன்பு அழுவதற்குப் பதிலாக, ராஜிநாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் எந்தப் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடித்ததில்லை. பாகிஸ்தானின் வரலாற்றில் இதுவரை எந்த பிரதமரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படவில்லை, அந்த வகையில் தற்போது சவாலை எதிர்கொள்ளும் மூன்றாவது பிரதமர் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com