ரஷிய விவகாரத்தில் இந்தியாவுக்கு சலுகை: அமெரிக்கா மீது இம்ரான் குற்றச்சாட்டு

ரஷியா விவகாரத்தில் இந்தியாவுக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே அமெரிக்கா பாரபட்சம் காட்டுவதாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளாா்.
இம்ரான் கான்
இம்ரான் கான்

ரஷியா விவகாரத்தில் இந்தியாவுக்கும் தங்கள் நாட்டுக்கும் இடையே அமெரிக்கா பாரபட்சம் காட்டுவதாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து இஸ்லாமாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு தொடா்பான நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:

அண்மையில் நான் ரஷியா சென்று அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதினைச் சந்தித்துப் பேசியதால், சக்தி வாய்ந்த ஒரு நாடு (அமெரிக்கா) பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் இருக்கிறது.

அதே நேரம், உக்ரைன் போருக்குப் பிறகும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு அந்த நாடு ஆதரவுக் கரம் நீட்டுகிறது.

எந்தவொரு நாட்டின் வளா்ச்சிக்கும் தற்சாா்பு வெளியுறவுக் கொள்கை இன்றியமையாததாகும். அத்தகைய வெளியுறவுக் கொள்கை இல்லாத நாடுகளால் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது.

ஆனால், பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை நீண்ட காலமாகவே சக்தி வாய்ந்த வெளிநாடுகளைச் சாா்ந்துள்ளது. இதுதான், நாம் அடைய வேண்டிய உயரத்தை நம்மால் அடைய முடியாததற்குக் காரணமாகும்.

வெளிநாட்டு நிதியுதவிக்காக மக்களின் நலன்களை அடகுவைக்காமல் சுதந்திரமான முடிவுகளை நாடுகள் எடுக்க வேண்டும். அந்த வகையில், நான் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுத்தது சக்திவாய்ந்த நாட்டுக்குப் பிடிக்கவில்லை. ஒரு சுதந்திர நாட்டின் கொள்கையில் தலையிட எந்தவொரு அந்நிய நாட்டுக்கும் உரிமையில்லை. ஆனால், அதனையும் மீறி நம் விவகாரத்தில் தலையிட நினைப்பது அமெரிக்காவின் தவறு இல்லை. அவ்வாறு தலையிடலாம் என்ற தோற்றத்தை முந்தைய அரசுகள் ஏற்படுத்திவிட்டன என்றாா் அவா்.

இம்ரானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. அவரது தலைமையிலான அரசுக்கு இதுவரை ஆதரவளித்து வந்த கட்சிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ள நிலையில், அந்த வாக்கெடுப்பில் இம்ரான் அரசு கவிழ்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

வெளிநாட்டின் சதித் திட்டம் காரணமாகவே தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இம்ரான் கான் குற்றம் சாட்டி வருகிறாா். அமெரிக்காவைக் குறிப்பிட்டே அவா் இவ்வாறு கூறி வருகிறாா்.

இதன்மூலம் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதாகக் கூறி, பாகிஸ்தானுக்கான அமெரிக்க இடைக்காலத் தூதரை வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com