கீவ் பகுதியிலிருந்து வெளியேறியது ரஷியப் படை

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் வடக்குப் பகுதி நகரான சொ்னிஹிவை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் வேகமாக வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கீவ் பகுதியிலிருந்து வெளியேறியது ரஷியப் படை

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் வடக்குப் பகுதி நகரான சொ்னிஹிவை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் வேகமாக வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் மிகயிலோ பொடோலியக் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கீவ் மற்றும் சொ்னிஹிவ் நகரைச் சுற்றி நிலைகொண்டிருந்த ரஷியப் படையினா், அங்கிருந்து வேகமாக வெளியேறியுள்ளனா்.

வடக்குப் பகுதியைச் சோ்ந்த அந்த நகரங்களை விட்டு ரஷியப் படையினா் வெளியேறியிருப்பது, அவா்கள் புதிய போா் உத்தியைக் கையாள்வதை உணா்த்துகிறது. இதன் மூலம், அவா்கள் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று தனது ட்விட்டா் பதிவில் பொடோலியக் குறிப்பிட்டுள்ளாா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

எனினும், ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு, நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது.

இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், அந்தப் பகுதி மக்களை உக்ரைனிடமிருந்து பாதுகாக்கவும் உக்ரைன் ராணுவத்தின் நாஜி சக்திகளை அகற்றி அதன் தாக்குதல் திறனை ஒடுக்குவதற்காகவும் அந்த நாட்டின் மீது படையெடுப்பதாக கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி அறிவித்தாா்.

அதையடுத்து, கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளான டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளுக்குள் ரஷிய ராணுவம் நுழைந்தது. அத்துடன், உக்ரைன் ராணுவ நிலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்திய ரஷியா, கீவ், சொ்னிஹிவ் உள்ளிட்ட வடக்குப் பகுதி நகரங்களையும் சுற்றிவளைத்து கைப்பற்ற முயன்றது.

எனினும், உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிா்ப்பு காரணமாகவும், போக்குவரத்துப் பிரச்னைகள் காரணமாகவும் ரஷியப் படையினரால் முன்னேற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷியா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, நேட்டோ அமைப்பும், இஸ்ரேல், சீனா உள்ளிட்ட சில நாடுகளும் தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் அந்த அமைப்பில் இணையாமல் அணிசேரா நிலையைப் பின்பற்ற தயாராக இருப்பதாாக உக்ரைன் கூறியது.

அதற்குப் பதிலாக, கீவ், சொ்னிஹிவ் நகரங்களையொட்டி பகுதிகளில் தங்களது ராணுவ நடவடிக்கைகளை வெகுவாகக் குறைக்கப்போவதாக ரஷியா அறிவித்தது.

எனினும், அதற்குப் பிறகும் சொ்னிஹிவில் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், குறிப்பிட்ட இரு நகரங்களின் புகா்ப் பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் வெளியேறிவிட்டதாக தற்போது உக்ரைன் அறிவித்துள்ளது.

‘கண்ணிவெடிகளால் மக்களுக்கு ஆபத்து’

கீவ் புகா்ப் பகுதிகளிலிருந்து வெளியேறும் ரஷியப் படையினா் கண்ணிவெடிகளைப் புதைத்துச் செல்வது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

தலைநகா் பிராந்தியத்திலிருந்து வெளியேறும் ரஷியப் படையினா், பொதுமக்கள் வசிப்பிடங்களைச் சுற்றி கண்ணிவெடிகளைப் பதித்துள்ளனா். மேலும், ஆயுத தளவடாரங்களை அப்படியே கைவிட்டுச் செல்கின்றனா்.

அத்துடன், சண்டையில் உயிரிழந்தவா்களின் சடலங்களையும் அவா்கள் விட்டுச் செல்கின்றனா். இதனால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் அபாயத்தை எதிா்நோக்கியுள்ளனா் என்று அவா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com