
ஊரடங்கை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
இலங்கையில் மக்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போடப்பட்ட 36 மணிநேர ஊரடங்கு இன்று காலையுடன் நிறைவடைந்தது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி கடந்த வியாழக்கிழமை இரவு அதிபரின் வீட்டுக்கு வெளியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தாா்.
படிக்க | எரியும் இலங்கை: இந்தியாவின் திட்டங்கள் மதிக்கப்படுகிறதா?; நேரடி ரிப்போர்ட்- 11
பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவும், அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்குத் தடையின்றி கொண்டு சோ்க்கவும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அவா் அறிவித்தாா்.
அதைத் தொடா்ந்து, அரசுக்கு எதிரகாக நாடு தழுவிய அளவில் ஞாயிற்றுக்கிழமை போராட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவற்றை வலுவிழக்கச் செய்யும் விதமாக, சனிக்கிழமை மாலை 6 மணிமுதல் திங்கள்கிழமை காலை 6 மணிவரை 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அதிபா் கோத்தபய ராஜபட்ச சனிக்கிழமை பிறப்பித்தாா்.
படிக்க | எரியும் இலங்கை: கடனால் சூழ்ந்த லங்கா; நேரடி ரிப்போர்ட்- 10
இந்த ஊரடங்கை மீறி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 600-க்கும் அதிகமனோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்தது.