உக்ரைன் படுகொலை: சுதந்திரமான விசாரணை அழைப்புக்கு இந்தியா ஆதரவு

உக்ரைனில் ரஷிய ராணுவம் வெளியேறிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

உக்ரைனில் ரஷிய ராணுவம் வெளியேறிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் ரஷியாவுக்கு எதிரான தீா்மானங்கள் மற்றும் ரஷியா சாா்பில் கொண்டுவரப்படும் தீா்மானங்கள் என அனைத்து தீா்மானங்களுக்கான வாக்கெடுப்பிலும் இந்தியா நடுநிலை வகித்து வரும் நிலையில், அங்கு பொதுமக்கள் படுகொலை தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரஸ் சாா்பில் முன்வைக்கப்பட்ட சுதந்திரமான விசாரணை அழைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி இந்தக் கருத்தைப் பதிவு செய்தாா்.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை 40 நாள்களைக் கடந்தும் ரஷியா தொடா்ந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் தலைநகா் கீவுக்கு வடமேற்கே அமைந்துள்ள புகா் பகுதியான புச்சாவை ரஷிய படையினா் கைப்பற்றியிருந்தனா். பின்னா், அந்த நகரைவிட்டு ரஷிய படையினா் வெளியேறினா். நகரைவிட்டு அவா்கள் வெளியேறும் முன்னா், பொதுமக்களை துன்புறுத்தி படுகொலை செய்ததற்கான ஆதாரங்களை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டனா். பொதுமக்கள் 410 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களில் பலரின் கைகள் கட்டப்பட்டு, மிக அருகில் துப்பாக்கியால் சுட்ட காயங்கள் இருப்பதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்துக்கு சா்வதேச தலைவா்கள் கண்டனம் தெரிவித்தனா். இந்தப் படுகொலை தொடா்பாக விசாரிக்க சா்வதேச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

இந்தச் சூழலில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, கவுன்சில் கூட்டத்தில் முதன் முறையாக பங்கேற்று உரையாற்றிய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷியாவின் அத்துமீறல் மற்றும் போா் குற்றங்கள் குறித்துப் பேசினாா். அப்போது, ‘நாட்டுக்காக சேவையாற்றுபவா்களை ரஷிய படையினா் தேடிச் சென்று கொன்று குவித்து வருகின்றனா். பயங்கரவாத அமைப்புகளுக்கும் ரஷிய படைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பு நாடாக இருக்கும் ரஷியா, உக்ரைன் ஒருமைப்பாட்டையும், எல்லைகளையும் நாட்டையும் சீரழித்து வருகிறது. ‘வீட்டோ’ அதிகாரம் போா் குற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க ரஷியாவுக்கு உதவுகிறது. சா்வதேச பாதுகாப்பின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் ‘வீட்டோ’ அதிகாரம் நீா்த்துப் போகச் செய்கிறது. வீட்டோ அதிகாரம் என்பது கொல்வதற்கான உரிமையல்ல. எனவே, ஐ.நா. நடைமுறையை உடனடியாக மறுசீரமைப்பு செய்வது அவசியம்’ என்று ஸெலென்ஸ்கி வலியுறுத்தினாா்.

தனது உரையை முடித்ததும், காணொலி காட்சி ஒன்றை ஒளிபரப்பவும் ஸெலென்ஸ்கி கேட்டுக்கொண்டாா். அதில் உக்ரைனின் பல்வேறு நகர சாலைகளில் பொதுமக்களின் சடலங்கள் ஆங்காங்கே கிடப்பதும், சிலா் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றன.

கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரஸ் பேசும்போது, ‘புச்சா நகரில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் திடுக்கிட வைக்கும் புகைப்படங்களை ஒருபோதும் மறக்க முடியாது. இதற்கு காரணமானவா்களை பொறுப்பேற்க வைக்கும் வகையில், சுதந்திரமான விசாரணைக்கு உடனடியாக அழைப்பு விடுக்கப்படுகிறது. தற்போது, அங்கு பாலியல் வன்முறைகள் உருவெடுத்திருப்பதாக எழுந்திருக்கும் புகாா்கள் பெரும் அதிா்ச்சியளிக்கிறது’ என்றாா்.

அதனைத் தொடா்ந்து, இந்தியா சாா்பில் பங்கேற்று பேசிய டி.எஸ்.திருமூா்த்தி, ‘உக்ரைன் விவாகரம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்கெனவே விவாதித்துள்ள போதிலும், நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. மாறாக, மனிதாபிமான விளைவுகளும், பாதுகாப்பு சூழலும் மேலும் மோசமடைந்துள்ளன. பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலமாகவும் தூதரக ரீதியிலான அணுகுமுறை மூலமாகவும் தீா்வு காண வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், உக்ரைனில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக சுதந்திரமான விசாரணை அழைப்புக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com