ஹிஜாப் விவகாரம்: இந்தியாவுக்கு எதிராக அல்-காய்தா தலைவர் விடியோ

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் பெரும் சரச்சையை ஏற்படுத்திய ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரும், உலக நாடுகளால் தேடப்படும் பயங்கரவாதியுமான
ஹிஜாப் விவகாரம்: இந்தியாவுக்கு எதிராக அல்-காய்தா தலைவர் விடியோ

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் பெரும் சரச்சையை ஏற்படுத்திய ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரும், உலக நாடுகளால் தேடப்படும் பயங்கரவாதியுமான அய்மான் அல்-ஜவாஹிரி விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவுக்கு எதிராக வெறுப்பூட்டும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
 அமெரிக்காவின் எஸ்ஐடிஇ புலனாய்வு அமைப்பு, வெள்ளையின மேலாதிக்கவாதிகள், இஸ்லாமிய ஜிஹாதி அமைப்புகளின் இணையதளச் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு, அல்-குவைதாவால் இணையத்தில் வெளியிடப்பட்ட விடியோ பதிவை அண்மையில் கண்டறிந்தது.
 இந்த விடியோ 8.43 நிமிடம் ஓடுகிறது. இதில் உள்ள அரபி உரைக்கு இணையான ஆங்கில மொழிபெயர்ப்புக் குறிப்புகளுடன் எஸ்ஐடிஇ இதனை வெளியிட்டுள்ளது. இந்த விடியோவில் அல்-காய்தா தலைவர் அய்மான்-அல்-ஜவாஹிரி பேசுகிறார்.
 உடல்நலமின்மையால் இறந்துவிட்டதாகக் கருதப்படும் ஜவாஹிரி கடந்த ஆறு மாதங்களுக்குள் வெளியிடும் இரண்டாவது விடியோ இதுவாகும். இதன் மூலமாக தான் இன்னமும் உயிருடன் இருப்பதை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
 இந்த விடியோவில் ஜவாஹிரி, கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் தடையை எதிர்த்து கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்து முழக்கமிட்ட இஸ்லாமிய மாணவி முஸ்கான் கானைப் பாராட்டியுள்ளார். "நமது முஜாஹித் சகோதரி' என்று முஸ்கானைக் குறிப்பிடும் ஜவாஹிரி, "துணிச்சலான சாதனை' என்ற பெயரில் முஸ்கானைப் பாராட்டி எழுதிய கவிதையையும் வாசிக்கிறார்.
 உலகில் தேடப்படும் மிக முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரான ஜவாஹிரி விடியோவில் மேலும் பேசியிருப்பதாவது:
 உலகின் பழைமையான பாகன் வழிபாட்டுமுறையைக் கொண்ட ஹிந்து சமூகத்தால் இஸ்லாமியர்கள் வஞ்சிக்கப்படுவதையும், ஹிந்து இந்தியாவின் உண்மை முகத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தியதற்காக அந்தப் பெண்ணுக்கு அல்லா வெகுமதி அளிக்கட்டும்.
 நம்மைக் குழப்பும் மாயைகளை நாம் களைய வேண்டும். இந்தியாவில் ஹிந்து சமூகத்தின் வஞ்சனையை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். முஸ்லிம்களை ஒடுக்க யாராலும் இயலாது. இந்திய துணைக் கண்டத்திலுள்ள முஸ்லிம்கள், இந்த உலகில் மனித உரிமை, அரசியலமைப்பு உரிமை, சட்டம் ஆகிய எதுவுமே உண்மையானவை அல்ல என்பதை உணர வேண்டும்.
 நமக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் எடுத்துவரும் முடிவு போலவே இந்தியாவிலும் நிலைமை உள்ளது. ஏற்கெனவே பிரான்ஸ், ஹாலந்து, ஸ்விட்சர்லாந்து நாடுகள் ஹிஜாப் அணிய தடை விதித்து தங்கள் உண்மை முகத்தை வெளிப்படுத்தின. ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய ஷரியத் சட்டத்துக்கு எதிரான இவர்கள் அனைவருமே ஒருவர்தான். இது இஸ்லாமியர்கள் மீதான போர் ஆகும்.
 நாம் அல்லாவை மட்டுமே நம்பி இருக்கிறோம். பாகிஸ்தான், வங்கதேச நாடுகள் நம்மைப் பாதுகாக்கவில்லை என்பதை இஸ்லாமியர்கள் உணர வேண்டும். நமக்குப் பதிலாக அவர்கள் நமது எதிரிகளைப் பாதுகாக்கிறார்கள் என்று அதில் பேசியுள்ளார்.
 கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் இயங்கும் பி.யு. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் ஆடை அணிந்து வர ஜனவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. அப்போது தலையில் முக்காடு அணிந்து வந்த 6 மாணவிகள் ஆடை விதிகளை மீறியதாகக் கூறி கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாநில அரசும் ஹிஜாப் தடையை ஆதரித்தது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராடினர். இந்த விவகாரம் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.
 இதுதொடர்பாக முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இஸ்லாம் மதத்தின் அத்தியாவசிய ஆடையாக ஹிஜாப் குறிப்பிடப்படவில்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது.
 அந்த மாநிலத்தில் தற்போதும் ஹிஜாப் விவகாரம் தணியாமல் உள்ளது. இந்நிலையில் அல்-காய்தா தலைவர் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக விடியோவில் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தகக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com