இலங்கை நிலைமையை சரியாகக் கையாளப்படாவிட்டால் "பேரழிவாக" மாறும்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா எச்சரிக்கை

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்கள் தொடரும் நிலையில், இலங்கையின் தற்போதைய நிலையை சரியாகக் கையாளப்படாவிட்டால் பேரழிவாக மாறும்
இலங்கை நிலைமையை சரியாகக் கையாளப்படாவிட்டால் "பேரழிவாக" மாறும்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா எச்சரிக்கை


கொழும்பு:  இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்கள் தொடரும் நிலையில், இலங்கையின் தற்போதைய நிலையை சரியாக கையாளப்படவில்லை என்றால் பேரழிவில் கொண்டுபோய் தள்ளிவிடும் என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா எச்சரித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது; எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மணிக் கணக்கில் மின்தடை அமல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இதற்குப் பொறுப்பேற்று கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நாட்டின் நிலைமை "துரதிர்ஷ்டவசமானது." நாட்டு மக்கள் சில மாதங்களாக இதை அனுபவித்து வருகின்றனர். இந்த கஷ்டமான நிலையிலிருந்து வெளியே வருவோம் என நம்புகிறேன். 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு, சில நேரங்களில் 10-12 மணி நேரம் மின்சாரம் இல்லை, பால் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தட்டுப்பாடுகள். நாடு இப்படி இருந்தால் மக்கள் எப்படி வாழ முடியும். உண்மையிலேயே நாட்டு மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். 

மேலும், நிலைமையை அரசு சரியாக கையாளப்படவில்லை என்றால் "அது ஒரு பேரழிவில் கொண்டுபோய் தள்ளி விடும்," நாட்டு மக்கள் தங்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் போது அவர்களின் வலியை என்னால் உணர முடிகிறது.

"தங்களது பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, உண்மையான மக்கள் நடத்தும் போராட்டம் தான் இது."  "போராட்டத்தை அமைதியாக நடத்துங்கள், வன்முறையில் ஈடுபடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ள ஜெயசூர்யா, இலங்கை மக்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர் என்று கூறினார். 

பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர்ந்து போராடுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "இதுபோன்ற நிலைகளை நாங்கள் பார்க்க விரும்பவில்லை, பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்காக  3-4 கிலோமீட்டர் தூரம் வாகனங்களுடன் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது, இந்த நேரத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்."

“அதனால்தான் அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வீதிக்கு வந்துள்ளனர்... நிலைமையை சரியாகக் கையாளப்படவில்லை என்றால் பேரழிவில் கொண்டுபோய் தள்ளி விடும் என்று நான் ஆரம்பத்திலே கூறினேன்” என்று ஜெயசூர்யா எச்சரித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com