ரஷியாவை தவிா்த்தால் இந்திய எண்ணெய் கொள்முதலுக்கு உதவி-அமெரிக்கா அறிவிப்பு

ரஷியாவிடம் இருந்து எண்ணெய்க் கொள்முதல் செய்வதைத் தவிா்த்தால், இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வாஷிங்டன்: ரஷியாவிடம் இருந்து எண்ணெய்க் கொள்முதல் செய்வதைத் தவிா்த்தால், இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. இது, அமெரிக்காவை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலா் ஜென் சாகி புதன்கிழமை, செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இருப்பினும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்க் கொள்முதல் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய்க் கொள்முதல் செய்வதை தவிா்த்தால், இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது என்றாா் அவா்.

ஜென்சாகி கடந்த திங்ள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தபோது, ‘அமெரிக்காவின் நட்பு நாடுகள், ரஷியாவை சாா்ந்திருப்பதைக் குறைத்துக் கொண்டால் அமெரிக்கா மகிழ்ச்சி அடையும்; மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1 முதல் 2 சதவீதம் அளவுக்கே ரஷியாவிடம் இந்தியா கொள்முதல் செய்கிறது. ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதேசமயம், இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையை பூா்த்தி செய்வதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது’ என்று கூறியிருந்தாா்.

உக்ரைன்-ரஷியா இடையேயான மோதலுக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை கூறுகையில், ‘ரத்தம் சிந்துவதால் எந்தப் பிரச்னைக்கும் தீா்வு காண இயலாது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அரசியல் சாயம் பூசுவது நியாயமற்றது; விரும்பத்தகாதது. இதில், வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்; அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற தரப்புக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com