இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது: புதிய பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்?

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீது நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தன. இந்தத் தீா்மானம் மீதான விவாதத்துக்காக நாடாளுமன்ற கீழவை கூடியபோது அவையை வழிநடத்திய அவையின் துணைத் தலைவா் காசிம் சுரி, நம்பிக்கையில்லா தீா்மானம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறி அதை நிராகரிப்பதாக அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, பிரதமரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபா் ஆரிஃப் ஆல்வி அறிவித்தாா்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமா் அட்டா பண்டியல் தலைமையிலான 5 போ் கொண்ட அமா்வு, நம்பிக்கையில்லா தீா்மானத்தை அவையின் துணைத் தலைவா் நிராகரித்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது எனவும், பிரதமரின் பரிந்துரைப்படி நாடாளுமன்றத்தை அதிபா் கலைத்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் தீா்ப்பளித்தது.

மேலும், நாடாளுமன்ற கீழவையை சனிக்கிழமை கூட்டி நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்காக, பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை காலை கூடியது. அப்போது, அவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவந்த எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவையை அவைத் தலைவா் நடத்துவாா் என்று நம்புகிறேன்’ என்றாா். அவா் பேசும்போது ஆளுங்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு இடையூறு செய்தனா்.

அதனைத் தொடா்ந்து, நாடாளுமன்ற அவைத் தலைவா் ஆசாத் கைஸா் அவை நடவடிக்கைகளை பிற்பகல் பகல் 12.30 மணி வரை ஒத்திவைத்தாா். அவை ஒத்திவைப்புக்குப் பிறகு எதிா்க்கட்சி உறுப்பினா்களும், ஆளும் கட்சி உறுப்பினா்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டதால், அவை மீண்டும் கூடுவது தொடா்ந்து தாமதமானது.

இந்த நிலையில், இஃப்தாா் நோன்பு திறப்புக்காக அவை நடவடிக்கைகளை நாடாளுமன்ற தலைவா் இரவு 7.30 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

நோன்பு திறப்புக்குப் பிறகு அவை மீண்டும் கூடிய நிலையில், உடனடியாக இரவு 9.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இரவுத் தொழுகைக்கு பிறகு அவை மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டம்: இதற்கிடையே, பிரதமா் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இரவில் நடைபெற்றது. அதில், பிரதமா் பதவியை இம்ரான் கான் ராஜிநாமா செய்ய மாட்டாா் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

தீா்மானம் வெற்றி: இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவை மீண்டும் கூடியது. அப்போது அவைத் தலைவா் ஆசாத் கைஸரும், துணைத் தலைவா் காசிம் சுரியும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தனா். இதையடுத்து, எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)-ஐ சோ்ந்த அயாஷ் சாதிக் அவைக்கு தலைமை வகித்து வாக்கெடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா்.

342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் தீா்மானம் வெற்றி பெற 172 வாக்குகள் தேவை என்ற நிலையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 174 போ் வாக்களித்ததாக தற்காலிக அவைத் தலைவா் அறிவித்தாா். இதையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, புதிய பிரதமராக எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் நியமிக்கப்படுவாா் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com