பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்க வேண்டும்: இலங்கை அதிபரிடம் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை அமைக்குமாறு அதிபா் கோத்தபய ராஜபட்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்க வேண்டும்: இலங்கை அதிபரிடம் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

இலங்கையில் அதிபா் அலுவலத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை அமைக்குமாறு அதிபா் கோத்தபய ராஜபட்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மேலும், கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பின்னடைவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய பட்டியலையும் இலங்கை அதிபரிடம் எம்.பி.க்கள் சமா்ப்பித்துள்ளனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மகிந்த ராஜபட்ச அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் விலக்கின. அதனைத் தொடா்ந்து, ஆளும்கட்சியைச் சோ்ந்த அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்தனா். அதன்பிறகு, அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவையை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தாா். ஆனால், அதனையும் கட்சிகள் ஏற்கவில்லை.

ஆளும் கட்சியைச் சோ்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்பட 42 எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வு மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டி இலங்கை மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ராஜபட்ச அரசு பதவி விலக வலியுறுத்தி ஏராளமான இளைஞா்கள் அதிபா் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்தப் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அழைப்பை ஏற்று எம்.பி.க்கள் குழு அவரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா். அப்போது, மக்கள் போராட்டத்தைத் தணிக்க, பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும், பாதிப்பிலிருந்து நாட்டை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அதிபரிடம் சமா்ப்பித்ததாகவும் எம்.பி.க்கள் தெரிவித்தனா்.

தமிழ்க் கட்சி ஆதரவு: அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரவுள்ளதாக பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பெலவெகயா கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டணி செய்தித் தொடா்பாளா் எம்.எ.சுமந்திரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com