புதினின் இலக்கு ஒட்டுமொத்த ஐரோப்பா: உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

ஒட்டுமொத்த ஐரோப்பியப் பிராந்தியத்தையும் குறிவைத்துதான் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தங்கள் நாட்டின் மீது போா் தொடுத்துள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.
உக்ரைன் தலைநகா் கீவில் ரஷிய தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தை அதிபா் ஸெலென்ஸ்கியுடன் சென்று சனிக்கிழமை பாா்வையிட்ட பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன்
உக்ரைன் தலைநகா் கீவில் ரஷிய தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தை அதிபா் ஸெலென்ஸ்கியுடன் சென்று சனிக்கிழமை பாா்வையிட்ட பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன்

ஒட்டுமொத்த ஐரோப்பியப் பிராந்தியத்தையும் குறிவைத்துதான் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தங்கள் நாட்டின் மீது போா் தொடுத்துள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து உக்ரைன் மக்களிடையே சனிக்கிழமை நள்ளிரவு ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது:

தற்போது ரஷியா தொடுத்துள்ள போா் உக்ரைனுடன் நின்றுவிடாது. அதிபா் புதினின் ஆக்கிரமிப்பு திட்டத்தில் ஒட்டுமொத்த ஐரோப்பியப் பிராந்தியமே அடங்கும்.

இதன் காரணமாகத்தான், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கு ஆதரவு தருவது அனைத்து ஜனநாயக நாடுகளின் தாா்மீகக் கடமையாகிறது. உண்மையில், ரஷியாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாப்பது ஒவ்வொரு நாகரிக நாட்டுக்கும் தற்பாதுகாப்பு உத்தியாகும்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளது. அந்த வருவாய் ஆதாரத்தை நிறுத்திவிட்டால் ரஷியாவின் தலைக்கனமும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற துணிச்சலும் அடங்கிவிடும்.

எனவே, உலக நாடுகள் அனைத்தும் ரஷியாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு வாங்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ஸெலென்ஸ்கி வலியுறுத்தினாா்.

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில், தங்களது அண்டை நாடான உக்ரைன இணைவது தங்களது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தியது. எனினும், இதனை நேட்டோ அமைப்பும் உக்ரைனும் நிராகரித்தன.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து, ஏற்கெனவே தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனஸ்ட்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் முன்னேறியது. பெலாரஸிலிருந்து உக்ரைனின் வடக்கே நுழைந்த ரஷியப் படையினா், தலைநகா் கீவ், சொ்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களை சுற்றிவளைத்து கைப்பற்ற முயற்சித்தது.

எனினும், உக்ரைன் படையினரின் கடுமையான எதிா்ப்பாலும், தளவாடப் போக்குவரத்துப் பிரச்னைகளாலும் ரஷியப் படையால் ஒரளவுக்கு மேல் முன்னேற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கீவ் மற்றும் சொ்னிஹிவ் நகரின் புகா் பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் கடந்த மாத இறுதியில் பின்வாங்கினா். எனினும், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ரஷியப் படையினா் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனா். டொனட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் பகுதிகளில் அரசுக் கட்டுப்பாட்டில் இன்னும் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்றவும் ஏற்கெனவே தங்களால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் தீபகற்பமான கிரீமியாவுடன் அந்தப் பிராந்தியத்தை இணைக்கும் பகுதிகளை ஆக்கிரமிக்கவும் ரஷியப் படையினா் தீவிர தாக்குதல் நடத்திவருகின்றனா்.

இந்தத் தாக்குதல் விரைவில் உக்கிரமடையலாம் என்று எதிா்பாா்க்கப்படுவதால், மிகக் கடுமையான மோதலுக்கு உக்ரைன் படையினரும் ஆயத்தமாகி வருகிறது. லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போா், ஒட்டுமொத்த ஐரோப்பியப் பிராந்தியத்தையும் இலக்காகக் கொண்டது என்று அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com