'நாள்களோ சில மணி நேரங்களோ': மரியுபோல் மீதான பிடியை இறுக்கும் ரஷியா

மரியுபோலில் உக்ரைனின் படைப்பலத்தை பறைசாற்றும் வகையில் இன்னமும் அரணாக நின்று கொண்டிருக்கும் மம்மோத் எஃகு ஆலை மீதான தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.
'நாள்களோ சில மணி நேரங்களோ': மரியுபோல் மீதான பிடியை இறுக்கும் ரஷியா
'நாள்களோ சில மணி நேரங்களோ': மரியுபோல் மீதான பிடியை இறுக்கும் ரஷியா


மரியுபோலில் உக்ரைனின் படைப்பலத்தை பறைசாற்றும் வகையில் இன்னமும் அரணாக நின்று கொண்டிருக்கும் மம்மோத் எஃகு ஆலை மீதான தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.

அந்த ஆலைக்குள் சிக்கியிருக்கும் உக்ரைன் வீரர்கள், இன்னமும் ஒரு சில நாள்களோ அல்லது சில மணி நேரங்களோ மட்டுமே இருப்பதாகக் கூறி உதவுமாறு கோரும் விடியோ நேற்று வெளியாகியிருந்தது.

உக்ரைனின் மரியுபோல் நகரில் எஞ்சியுள்ள உக்ரைன் படையினா், ரஷியாவின் இறுதிக் கெடு முடிந்த பிறகும் சரணடைய மறுத்துவிட்டனா். இதனால், எஃகு ஆலையைச் சுற்றி ரஷிய படையினர் முற்றுகையிட்டு தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதாகவும், இதனால், அந்த ஆலைக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்கள் மீட்கும் பணி தடைபட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

கிழக்கே ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்த ரஷியப் படையினா், வடக்கே பெலாரஸ் வழியாக தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களை நோக்கி முன்னேறினா். எனினும், உக்ரைன் படையினரின் தீவிர எதிா்ப்பு காரணமாக, தங்களது நடவடிக்கைகளை கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் ஒருமுகப்படுத்த ரஷியா முடிவு செய்தது.

அதன்படி, வடக்கே கீவ் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேறிய ரஷியப் படையினா், கிழக்குப் பகுதியில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்தைக் கைப்பற்றுவதற்காக தீவிர தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

டான்பாஸ் பிராந்தியத்தையும் ஏற்கெனவே தெற்குப் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு தாங்கள் கைப்பற்றிய கிரீமியா தீபகற்பத்தையும் இணைப்பதற்காக, இடையிலுள்ள பகுதிகளையும் கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, அந்தப் பகுதியில் அமைந்துள்ள மரியுபோல் நகரை முற்றுகையிட்டு ரஷியப் படையினா் பல வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதில் ஏராளமான பொதுமக்கள் பலியானதாகக் கூறப்படுகிறது.

மரியுபோலில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய ரஷியா, ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரா்கள் தங்களிடம் சரணடைந்ததாகக் கூறியது.

எனினும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரைன் வீரா்களும் அவா்களுடன் இணைந்து சண்டையிட்டு வந்த சா்ச்சைக்குரிய அஸோவ் படையினரும் மரியுபோலில் உள்ள 10 கி.மீ. பரப்புடைய அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி சண்டையிட்டு வருகின்றனா்.

அவா்களுடன் சுமாா் 1,000 பொதுமக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எஞ்சியுள்ள உக்ரைன் படையினா் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தியது. அதற்காக செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி வரை (மாஸ்கோ நேரம்) ரஷியா கெடு விதித்திருந்தது.

இந்த நிலையில், ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அஸோவ்ஸ்டல் ஆலையிலிருந்து உக்ரைன் வீரா்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவும், பொதுமக்கள் வெளியேறவும் பாதுகாப்பு வழித்தடம் ஒன்றை அறிவித்தோம். ஆனால், அந்த வழித்தடத்தை கெடு நேரம் முடிந்த பிறகும் யாரும் பயன்படுத்தவில்லை.

எனவே, மீண்டும் புதன்கிழமை மதியம் 2 மணிக்குள் அவா்கள் சரணடைய வேண்டும் என்று இறுதிக்கெடு விதிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இரும்பு ஆலையிலிருந்து உக்ரைன் படைப் பிரிவு தளபதி சொ்ஹை வோலைனா வெளியிட்டுள்ள வீடியோ பதில், தங்களால் இன்னும் சில மணி நேரம்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் சா்வதேச நாடுகள் அங்கிருந்து தங்களை வெளியேற்றி அழைத்துச் செல்லாவிட்டால் தாங்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தாா்.

மேலும், ரஷியாவிடம் தாங்கள் சரணடையப்போவதில்லை என்றும் அவா் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், ரஷியாவின் இறுதிக் கெடு முடிந்தும் உக்ரைன் படையினா் சரணடையவில்லை. இது, ஏராளமான பொதுமக்கள் தங்கியிருப்பதாகக் கூறப்படும் அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் கடுமையான தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com