ரஷியாவுக்கு ஆதரவளித்த சீனாவை சாடும் அமெரிக்கா...இந்தியாவுக்கு உதவ உறுதி

ரஷியாவின் பொய் செய்திகளை பெரிதாக்கும் சீனா, உக்ரைனில் நிலைமையை சுமூகமாக்க உதவவில்லை என அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உக்ரைனில் போர் தொடுத்துவரும் விளாடிமிர் புதினுக்கு ஆயுத உதவிகளை வழங்கினால் சீனா மீது தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்காவின் மூத்த தூதர் எச்சரித்துள்ளார். 

பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் இணை அமைச்சர் வெண்டி ஷெர்மன், ரஷியாவின் பொய் செய்திகளை பெரிதாக்கும் சீனா, உக்ரைனில் நிலைமையை சுமூகமாக்க உதவவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷியா போரிலிருந்து சீனா பாடம் கற்கும் என தான் நம்புவதாகவும் அதேபோல கூட்டணி நாடுகளிடமிருந்து அமெரிக்காவை பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தடை விதிப்பது, ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது போன்றவற்றிலிருந்து நாங்கள் என்னவெல்லாம் செய்தோம் என அவர்கள் பாத்திருப்பார்கள். ஆயுத உதவிகளை வழங்கினால் என்ன நடவடிக்கை எடுப்போம் என்பதை இதன்மூலம் சீனா சற்று உணர்ந்து இருப்பார்கள். 

ரஷிய ஆயுத தொழில்துறையில் உலகளாவிய தடை எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, பாரம்பரியமாக ரஷிய ஆயுதங்களை நம்பியிருக்கும் இந்தியா, அதிலிருந்து விடுபட அவர்களுக்கு உதவி செய்வோம். ரஷிய ஆயுதங்களில் கட்டமைக்கப்பட்ட அவர்களின் இராணுவத்திற்கு ரஷிய ஆயுதங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

ஏனெனில் எங்கள் பொருளாதாரத் தடைகள் ரஷியாவின் இராணுவ-தொழில்துறை வளாகத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. அது விரைவில் மீண்டு வராது" என்றார்.

புதினின் ராணுவ படைகள் போர் குற்றங்களில் ஈடுபட்டிருப்பது கவலை அளித்த போதிலும், ரஷியாவுடன் வியூக ரீதியான உறவை மேம்படுத்துவோம் என சீனா இந்த வாரம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், அமெரிக்க விதித்த தடைகளை சீன அரசு எதிர்த்தாலும் அந்நாட்டு நிறுவனங்கள் பின்பற்றியே வருகிறது. 

உக்ரைன் போரை பொறுத்தவரை சீனா எடுத்த அதே நிலைபாட்டையே இந்தியாவும் எடுத்துள்ளது. ஐநாவில் ரஷியாவை கண்டிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்காமல் புறக்கணித்தது. மேலும், போர் நிறுத்தத்தில் ஈடுப்பட்டு தூதரக ரீதியான தீர்வை காண வேண்டும் என இந்தியா இரண்டு நாடுகளுக்கும் வலியுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com