பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக பிலாவல் புட்டோ பதவியேற்பு

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பிலாவல் புட்டோ ஜா்தாரி புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக பிலாவல் புட்டோ பதவியேற்பு

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பிலாவல் புட்டோ ஜா்தாரி புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

பாகிஸ்தான் அதிபா் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற விழாவில் பிலாவல் புட்டோவுக்கு (33) அதிபா் ஆரிஃப் ஆல்வி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா். நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், முன்னாள் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி மற்றும் அதிகாரிகள், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.

பாகிஸ்தான் அரசில் முதல் முறையாக பிலாவல் புட்டோவுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா் அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்கு கடந்த 2018 தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைகளைச் சீரமைக்க வேண்டிய முக்கியமான தருணத்தில், அவா் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றுள்ளாா்.

மேலும், முன்னாள் பிரதமா் இம்ரான்கான் அமெரிக்கா மீது குற்றம்சாட்டியதால், அமெரிக்கா- பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அதை சமன்செய்யும் பொறுப்பும், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் முன்னெடுப்பதற்கான சவாலும் அவருக்கு முன்பாக உள்ளது.

கடந்த வாரம் லண்டன் சென்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்- என்) தலைவா் நவாஸ் ஷெரீஃபை சந்தித்து திரும்பிய நிலையில், பிலாவல் புட்டோ பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றுள்ளாா். அவா் பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக பதவி வகித்து, ராவல்பிண்டியில் கடந்த 2007-இல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பேநசீா் புட்டோவின் மகனாவாா்.

தற்போதைய பாகிஸ்தான் கூட்டணி அரசில் பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 2-ஆவது பெரிய கட்சியாக திகழ்கிறது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வெற்றி பெற்ால் இம்ரான் கான் பதவி விலக நோ்ந்தது. இதற்கு ரஷியா, சீனா, ஆப்கானிஸ்தான் மீதான தனது தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கைகள் காரணமாக அமெரிக்கா மேற்கொண்ட சதித் திட்டம்தான் காரணம் என இம்ரான் கான் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தாா். இருப்பினும் அதற்கான சான்றுகளை அவா் பகிரவில்லை. அதேவேளையில், இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com