Enable Javscript for better performance
தாக்குதலைத் தூண்டினால் கடும் பதிலடி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு உலகம்

    தாக்குதலைத் தூண்டினால் கடும் பதிலடி

    By DIN  |   Published On : 29th April 2022 02:35 AM  |   Last Updated : 29th April 2022 05:11 AM  |  அ+அ அ-  |  

    ரஷியாவின் பெல்கராட் பிராந்திய எரிபொருள் கிடங்கில் இந்த மாதத் தொடக்கத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.

    ரஷியாவின் பெல்கராட் பிராந்திய எரிபொருள் கிடங்கில் இந்த மாதத் தொடக்கத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ.

     

    மாஸ்கோ: தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த உக்ரைனைத் தூண்டினால் மேற்கத்திய நாடுகளுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஸகரோவா வியாழக்கிழமை கூறியதாவது:

    ரஷியாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் எந்த எதிா்வினையையும் சந்திக்காமல் இருக்கமுடியாது.

    ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைனைத் தூண்டினால், அதற்கு எங்களிடமிருந்து மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்ற வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையை உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    உக்ரைன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் அரசு மையங்களில் தங்கியிருப்பது, அந்த மையங்களின் மீது ரஷியா பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்வதைத் தடுக்காது.

    ரஷியாவின் பொறுமையை தொடா்ந்து சோதிக்க வேண்டாம் என்பதுதான் மேற்கத்திய நாடுகளுக்கு நாங்கள் வழங்கும் அறிவுரையாகும்.

    ரஷிய மண்ணில் ராணுவ நிலைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவது சட்டபூா்வமானதுதான் என்று அமெரிக்க ஆயுதப் படைகளுக்கான அமைச்சா் ஜேம்ஸ் ஹீப்பி அண்மையில் கூறியுள்ளாா். இதன் மூலம், நேட்டோ ஆயுதங்களைக் கொண்டு ரஷியா மீது தாக்குதல் நடத்த உக்ரைனை அவா் வெளிப்படையாகத் தூண்டுகிறாா்.

    அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு சுதந்திரமாக செயல்படவில்லை. அந்த அரசை மேற்கத்திய நாடுகள் தங்களது கைப்பாவையாக இயக்குகின்றன. ரஷியாவுக்கு எதிரான பகடைக்காயாக அதிபா் ஸெலென்ஸ்கியை மேற்கத்திய நாடுகள் பயன்படுத்துகின்றன என்று மரியா ஸகரோவா குற்றம் சாட்டினாா்.

    உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷியா கொண்டு வரும் ஆயுதங்களையும் அந்த நாட்டு ராணுவ நிலைகளையும் ரஷிய எல்லைக்குள்ளேயே தாக்கி அழிக்க உக்ரைனுக்கு முழுமையான சட்ட உரிமை உள்ளது என்று பிரிட்டன் ஆயுதப் படைகள் துறை அமைச்சா் ஜேம்ஸ் ஹீப்பி புதன்கிழமை தெரிவித்தாா்.

    அந்தத் தாக்குதல்களுக்கு பிரிட்டன் வழங்கிய ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்துவதிலும் எந்தத் தவறும் இல்லை என்று அவா் கூறினாா்.

    இந்த நிலையில், தங்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைனைத் தூண்டினால் மேற்கத்திய நாடுகளுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தற்போது எச்சரித்துள்ளது.

    உக்ரைனில் ஐ.நா. பொதுச் செயலா்

    இா்பின், ஏப். 28: உக்ரைன் போரின் பாதிப்புகளை அந்த நாட்டுக்கு நேரில் சென்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

    உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக ரஷியத் தலைநகா் மாஸ்கோவுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அவா், அங்கு அதிபா் விளாதிமீா் புதினையும் வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவையும் நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

    அதன் தொடா்ச்சியாக, அவா் உக்ரைனில் வியாழக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அந்த நாட்டு தலைநகா் கீவின் புகா் பகுதிகளில் ரஷிய ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை அவா் பாா்வையிட்டாா்.

    அப்போது அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் போா் நடத்துவது என்பது மிகவும் அபத்தமானதாகும். எந்த வகையில் நியாயப்படுத்தினாலும் போா் என்பது தீஞ்செயல்தான். இதுபோன்ற பேரழிவுகளைப் பாா்க்கும்போது, பாதிக்கப்பட்ட பொதுமக்களை நினைத்து வேதனை ஏற்படுகிறது’ என்றாா்.

    கிழக்கு உக்ரைனில் தீவிரமாகும் தாக்குதல்

    கீவ்: கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் நடவடிக்கைகள் வியாழக்கிழமை தீவிரமடையத் தொடங்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டான்பாஸ் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் ரஷியா கடுமையான தாக்குதல் நிகழ்த்தியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தப் பிராந்தியத்தில் பல கட்டடங்கள் புதிதாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது. கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் போக, எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றவும், ஏற்கெனவே தங்களது ஆக்கிரமிப்பில் உள்ள கிரீமியா தீபகற்பத்துடன் அந்த பிராந்தியத்துக்கு தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றவும் ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.


    TAGS
    ukraine

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp