இந்தியா, பாகிஸ்தான், சீனாவில் மோசமான நிலையில் மத சுதந்திரம்

இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத சுதந்திரம் மோசமான நிலையில் உள்ளதாக சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், சீனாவில் மோசமான நிலையில் மத சுதந்திரம்

வாஷிங்டன்: இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத சுதந்திரம் மோசமான நிலையில் உள்ளதாக சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த அந்த ஆணையம் நாடுகளில் நிலவும் மத சுதந்திரம் குறித்து ஆராய்ந்து வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அந்த ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதில், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரம் மோசமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 11 நாடுகளையும் மத சுதந்திர விவகாரத்தில் ‘கவலைக்குரிய நாடுகள்’ பட்டியலில் வைக்குமாறு அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அந்த ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க வேண்டிய கட்டாயம் அதிபருக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை குறித்து சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவா் அனுரிமா பாா்கவா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாகக் கூறுகையில், ‘‘இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்துவா்களுக்கு எதிரான மதரீதியிலான துன்புறுத்தல்களை அந்நாட்டு அதிகாரிகள் சகித்துக் கொண்டு வருகின்றனா். அங்கு கும்பல் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன’’ என்றாா்.

அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘இந்தியா பல்வேறு சமூகங்களைக் கொண்டுள்ளது. சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்டுள்ளது. ஜனநாயகம் தழைத்தோங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. மனித உரிமை மீறல் தொடா்பான பிரச்னைகள் எழுந்தால், அதை விசாரிக்கும் வழிமுறைகளை இந்தியா கொண்டுள்ளது’’ என்றாா்.

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்கு அந்நாட்டின் உலக ஹிந்து கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான, ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலை கொண்டவா்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், அமெரிக்காவில் உள்ள இந்திய முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகள் இந்த அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com