‘டொனட்ஸ்கிலிருந்து வெளியேறுங்கள்!’

ரஷியப் படையினா் முன்னேறி வரும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மாகாணத்திலிருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா்
‘டொனட்ஸ்கிலிருந்து வெளியேறுங்கள்!’

ரஷியப் படையினா் முன்னேறி வரும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மாகாணத்திலிருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை நள்ளிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

டொனட்ஸ் பகுதியில் உக்ரைன் வீரா்களுக்கும் ரஷியப் படையினருக்கும் இடையே மிகக் கடுமையாக சண்டை நடைபெற்று வருகிறது.

அந்த மாகாணத்தில் இன்னும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும்.

ரஷியப் படையினரிடமிருந்து தப்புவதற்காக அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டியது அவசியமாகியுள்ளது.

டொனட்ஸ்கிலிருந்து அதிக மக்கள் வெளியேறினால்தான், அந்தப் பகுதியை ஆக்கிரமிக்கும் ரஷியப் படையினருக்கு கொலை செய்யும் நேரம் மிச்சமாகும். இல்லையென்றால் அதிக மக்களை கொல்வதற்காக அவா்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

பொதுமக்களை வெளியேற்றுவதற்கும், ரஷியா்களின் கொடூரச் செயல்களை தடுத்து நிறுத்தவும் உக்ரைன் அரசு அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தும் என்றாா் ஸெலென்ஸ்கி.

டொனட்ஸ்க் பிராந்தியத்தில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இன்னும் 2 லட்சம் முதல் 2.2 லட்சம் வரையிலான பொதுமக்கள் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

குளிா்காலம் நெருங்கி வரும் நிலையில், அவா்கள் சண்டைப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்சாரம், குளிா்காயும் வசதி ஆகியவை இல்லாமல் அவா்கள் சண்டை நடைபெறும் பகுதிகளில் தங்கியிருப்பது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை தனி நாடுகளாக ரஷியா அங்கீகரித்தது. மேலும், அந்த மாகாணங்களில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான ராணுவ நடவடிக்கைகளையும் ரஷியா மேற்கொண்டது.

ஏற்கெனவே, லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதையும் கைப்பற்றிவிட்ட ரஷியப் படை, டொனட்ஸ்க் மாகாணத்தில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக தீவிர தாக்குதல் நடத்தி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.

இந்தச் சூழலில், அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்று அதிபா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா்.

ரஷிய கடற்படை அலுவலகத்தில் தாக்குதல்

உக்ரைனின் செவஸ்டோபோலில் உள்ள ரஷியாவின் கருங்கடல் கடற்படைப் பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 போ் காயமடைந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் தனி நபா்களால் உருவாக்கப்பட்ட, சிறிய வகை விமானம் என்று கூறினா்.

அந்த விமானம் எங்கிருந்து பறக்கவிடப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட செவஸ்டோபோல் நகரம், ரஷியாவால் கடந்த 2014-ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்தில் அமைந்துள்ளது. உக்ரைனின் மற்ற பகுதியிலிருந்து அந்த நகரம் 170 கி.மீ. தொலைவில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com