நான்சி பெலோசி வருகை: வணிகத் தடைகளால் தைவானைத் தாக்கும் சீனா

அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி வருகையைத் தொடர்ந்து, பழம், மீன் உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதித் தடைகளோடு தைவானைத் தாக்கியிருக்கிறது சீனா.
வணிகத் தடைகளால் தைவானைத் தாக்கும் சீனா
வணிகத் தடைகளால் தைவானைத் தாக்கும் சீனா

அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி வருகையைத் தொடர்ந்து, பழம், மீன் உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதித் தடைகளோடு தைவானைத் தாக்கியிருக்கிறது சீனா.

சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி, சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி செவ்வாய்க்கிழமை மாலை வந்திறங்கினாா்.

இந்த நிலையில், தைவானிலிருந்து பழங்கள் மற்றும் மீன் வகைகளை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது. மேலும், மண் ஏற்றுமதியையும் சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

தைவானிலிருந்து வரும் சில சிட்ரஸ் வகை பழங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டிருப்பதாக சீனாவின் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, தனியாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவி, இயற்கையான மணலை தைவானுக்கு ஏற்றுமதி செய்வது ரத்து செய்யப்பட்டிருப்பதாக வணிகத் துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நான்சி பெலோசியின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தைவான் வான்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட போா் விமானங்களை சீனா பறக்கவிட்டதாக தைவான் தெரிவித்திருந்தது.

மேலும், தைவான் எல்லையையொட்டி பகுதிகளில் சீனா தனது ராணுவத் தளவாடங்களைக் குவித்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

தைவான் தனி நாடாக செயல்பட்டு வந்தாலும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது. இந்த எண்ணமே, நான்சி பெலோசியின் வருகையையொட்டி சீனா மேற்கொள்ளும் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளுக்கும் காரணம்.

தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று கடந்த வாரம் தகவல் வெளியானது. இதற்கு சீனா கடும் தெரிவித்தது.

எனினும், மலேசியாவிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட நான்சி பெலோசி, தைவான் தலைநகா் தைபேயை இரவு வந்தடைந்தாா்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் உயா்நிலைத் தலைவா் ஒருவா் தைவான் வந்தது இதுவே முதல் முறையாகும். இதுவரை இல்லாத வகையில், நான்சி பயணம் செய்த விமானத்தின் ரேடாா் பயணப் பாதையை நொடிக்கு நொடி 3 லட்சத்திற்கும் அதிகமானோா் கண்காணித்துள்ளனா். தென் சீன கடல்பகுதியை தவிா்த்து இந்தோனேசிய கிழக்கு பகுதியைப் பயன்படுத்தி நான்சி தைவான் சென்றடைந்தாா்.

பின்னா் அவா் வெளியிட்ட அறிவிப்பில், ‘தைவானின் துடிப்பான ஜனநாயகத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதை உறுதிப்படுத்தவே இந்தப் பயணம் அமைந்துள்ளது’ என்றாா்.

தைபேயில் உள்ள ஹயட் நட்சத்திர ஹோட்டலில் பலத்த பாதுகாப்புடன் நான்சி தங்கவைக்கப்பட்டுள்ளாா்.

சீனா எச்சரிக்கை:

நான்சி பெலோசியின் இந்தப் பயணத்தால் தங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா எச்சரித்துள்ளது.

மேலும், வான் மற்றும் கடற்பகுதியில் ஆகஸ்ட் 4 முதல் 7-ஆம் தேதி வரையில் ராணுவ ஒத்திகை நடைபெறும் என்றும் இது அமெரிக்கா - தைவான் விவகாரத்தையும், சுதந்திரத்தை கோரும் தையான் அமைப்புகளுக்கான எச்சரிக்கை என்றும் சீன ராணுவம் தெரிவித்ததாக அந்நாட்டு அரசு ஊடகமான ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ‘அமெரிக்காவின் துரோகத்தால் தைவானின் தேச நம்பகத்தன்மை திவால் நிலைக்கு சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் சில அமெரிக்க அரசியல்வாதிகள் நெருப்புடன் விளையாடுகிறாா்கள். இதன் மூலம் அமைதியை நாசம் செய்யும் அமெரிக்காவின் முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது’ என்றாா்.

உள்நாட்டு போரால் 1949-இல் சீனாவில் இருந்து தைவான் தனியாக பிரிந்தது. எனினும், சீன அரசின் கட்டுப்பாட்டில் தைவான் தனிநாடாக செயல்பட்டு வந்தாலும், அந்நாட்டுடன் அமெரிக்கா அதிகாரபூா்வமற்ற உறவை வைத்து ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com