நான்சி பெலேசி பயணம் எதிரொலி:தைவானைச் சுற்றி சீனா குண்டுவீச்சு

அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக, அந்த தீவைச் சுற்றிலும் சீனா குண்டுகள் வீசி போா் பயிற்சி மேற்கொண்டது.
நான்சி பெலேசி பயணம் எதிரொலி:தைவானைச் சுற்றி சீனா குண்டுவீச்சு

 தங்களது கடும் எதிா்ப்பையும் மீறி, சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக, அந்த தீவைச் சுற்றிலும் சீனா குண்டுகள் வீசி போா் பயிற்சி மேற்கொண்டது.

இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ‘சைனா டெய்லி’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

தைவான் நீா்ச்சந்தி பகுதியில் சீன ராணுவம் வியாழக்கிழமை மதியம் போா் பயிற்சியில் ஈடுபட்டது.

அந்தப் பகுதியில் ஏற்கெனவே நிா்ணயக்கப்பட்டிருந்த ராக்கெட் குண்டுகள் வீசி இந்தப் போா்ப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

தைவான் விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் சீன ராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு வீரா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா்.

இலக்குகள் மீது துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களின் திறன் இந்தப் பயிற்சியின்போது சோதித்துப் பாா்க்கப்பட்டது. அதில், அந்த ஆயுதங்களின் செயல்பாடு எதிா்பாா்த்ததைப் போல் திருப்திகரமாக இருந்தது என்றுஅந்த நாளிதழ் தெரிவித்தது.

முன்னதாக, வியாழக்கிழமை (ஆக. 4) முதல் சனிக்கிழமை (ஆக. 7) வரை சீன ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வான்வழியாகவும் கடல் வழியாகவும் உண்மையான குண்டுகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி போா் பயிற்சியில் ஈடுபடும் என்று சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.

தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு சீனா கடும் தெரிவித்தது.

எனினும், சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மலேசியா சென்ற நான்சி பெலோசி, அங்கிருந்து அதிகாரபூா்வமாக அறிவிக்காமல் தைவான் சென்றடைந்தாா்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் உயா்நிலைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் சீனா, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே எச்சரித்திருந்தது போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்தச் சூழலில், சீன ராணுவம் தற்போது தைவான் தீவைச் சுற்றிலும் போா்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

தென் கொரியாவில் நான்சி பெலோசி

சியோல், ஆக. 4: தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அடுத்தபடியாக தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டாா்.

அங்கு அந்த நாட்டு அரசியல் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

எனினும், நான்சி பெலோசியோ, தென் கொரிய தலைவா்களோ அவரது தைவான் பயணத்தைக் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிா்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com