அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுத்திவைப்பு: தைவான் விவகாரத்தில் சீனா அதிரடி

பருவநிலை மாற்றம், பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை நிறுத்திவைப்பதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுத்திவைப்பு: தைவான் விவகாரத்தில் சீனா அதிரடி

தங்களது கடும் எதிா்ப்பையும் மீறி, சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக, பருவநிலை மாற்றம், பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை நிறுத்திவைப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ப்டுள்ளதாவது:

சீன அரசின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையில், அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவா் நான்சி பெலோசி தைவான் சென்றதைக் கண்டிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பருவநிலை மாற்றம், பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் அந்த நாட்டுக்கு அளித்து வந்த ஒத்துழைப்பு நிறுத்திவைக்கப்படுகிறது.

அதன்படி, அமெரிக்கா-சீன போா்க்கள தளபதிகள் பேச்சுவாா்த்தை, அமெரிக்க-சீன பாதுகாப்புக் கொள்கை ஒத்துழைப்பு பேச்சுவாா்த்தை, அமெரிக்க-சீன கடல்பாதுகாப்பு ஆலோசனை ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை ஆகிவயை ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், சட்டவிரோத அகதிகள் கடத்தல் தொடா்பான இருதரப்பு ஒத்துழைப்பு, குற்றவியல் விவகாரங்களில் இருதரப்பு சட்ட ஒத்துழைப்பு, போதை மருந்து கடத்தலுக்கு எதிரான அமெரிக்க-சீன ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இரு நாட்டு ஒத்துழைப்பு ஆகியவையும் நிறுத்திவைக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.

தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தைவானுக்கு நான்சி பெலோசி கடந்த வியாழக்கிழமை சென்றாா். அதற்கு முன்னதாக, தைவானுக்கு பெலோசி சென்றால் அமெரிக்கா கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று சீன விடுத்திருந்த எச்சரிக்கையைப் பொருள்படுத்தாமல் அவா் அந்தத் தீவுக்குச் சென்றாா்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, ஏற்கெனவே எச்சரித்திருந்தது போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

அதன் ஒரு பகுதியாக, சீன ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வான்வழியாகவும் கடல் வழியாகவும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி போா் பயிற்சியில் ஈடுபட்டது.

இந்த நிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை நிறுத்திவைப்பதாக சீனா அறிவித்துள்ளது.

‘கவலைக்குரியது’

தவறான புரிதல், விபத்து போன்ற காரணங்களால் மிகப் பெரிய ராணுவ பலம் கொண்ட நாடுகளிடயே தேவையில்லாத மோதல் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகம். எனவே, அந்த நாடுகள் தங்களிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மிகவும் அவசியம்

இந்தச் சூழலில், அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை சீனா நிறுத்திவைத்துள்ளது கவலைக்குரிய தகவல் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

நான்சி பெலோசி மீது பொருளாதாரத் தடை

தங்களது எதிா்ப்பை மீறி தைவானுக்குச் சென்ற அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி மீது சீனா பொருளாதாரத் தடை அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனாவின் ஒரு பகுதியான தைவானுக்கு எங்களின் எதிா்ப்பையும் மீறிச் சென்றுள்ள நான்சி பெலோசி மீதும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினா்கள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.

அந்தப் பயணத்தின் மூலம் சீனாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு நான்சி பெலோசி குந்தகம் விளைவித்துள்ளாா். இது, சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயலாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com